நெல் ஈரப்பத அளவை நிர்ணயம் செய்ய ஒன்றிய குழு இன்று தமிழ்நாடு வருகை: 3 குழுக்களாக பிரிந்து ஆய்வு
சென்னை: நெல் ஈரப்பத அளவை நிர்ணயம் செய்ய ஒன்றிய குழு இன்று தமிழ்நாடு வருகிறது. 3 குழுக்களாக பிரிந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கியதாலும் தொடர்ச்சியாக வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதாலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்துள்ளதாலும் அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தற்போது 17% ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த 19ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கை ஒன்றிய அரசு பரிசீலனை செய்து நெல் தரத்தை மதிப்பீடு மற்றும் ஆய்வு செய்வதற்காக 3 குழுக்களை நியமித்து 23ம் தேதி அறிவித்தது. அதன்படி நெல் தரத்தை மதிப்பீடு செய்வதற்காக ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 2 துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் தரத்தை ஆய்வு செய்ய உள்ளது. இந்த குழுவானது இன்று முதல் 3 நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுத்துறை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளையும், கடலூர் மாவட்டத்தில் 27ம் தேதி ஒன்றிய குழு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. மேலும் இன்று சென்னை வரும் இந்த குழுவானது தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 3 மூத்த அதிகாரிகளுடன் இணைந்து நெல் மாதிரிகளை சேகரித்து அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. ஆய்வின் முடிவுகள் மற்றும் கூட்டு பரிந்துரைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த அறிக்கையை ஒன்றிய அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.