நெல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்தி கொள்முதல் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு தரச்சான்று வழங்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் சக்கரபாணி வேண்டுகோள்
சென்னை: நெல் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்திக் கொள்முதல் செய்திட அனுமதியும், செறிவூட்டப்பட்ட அரிசியை சோதனை செய்து, தரச் சான்று விரைந்து வழங்கவும் ஆவன செய்ய வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடந்த ‘விண்டெர்ஜி இந்தியா 2025’ கருத்தரங்கத்திற்காக வந்திருந்த ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோக திட்டம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்தார். அப்போது, ஈரப்பதத்தை 17%லிருந்து 22% ஆக அதிகரித்து நெல் கொள்முதல் செய்திடவும் செறிவூட்டப்பட்ட அரிசியை கலப்பதற்கான தரச்சான்றை விரைந்து வழங்க ஆவன செய்ய கேட்டுக் கொண்டதோடு கீழ்க்காணும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தர வேண்டுகோள் விடுத்தார்.
2016 முதல் 2021 வரை தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய உணவு மானிய நிலுவைத் தொகை ரூ.973 கோடியை வழங்கல் 2010-11, 2013-14, 2014-15 ஆண்டுகளுக்கான அரிசிக்காக இறுதி செய்யப்பட்ட விலை முன்மொழிவினை ஏற்று அதற்கான தொகை வழங்குதல், நெல்லைக் காய வைக்கும் இயந்திரங்களை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வழங்க உதவி செய்ய வேண்டும் என்றார்.
மேலும், அக்டோபர் - டிசம்பர் 2025 மாதங்களுக்கான மானியத் தொகையில் ரூ.1745.66 கோடி வழங்க அனுமதி அளித்ததற்காக ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் சத்ய பிரதா சாகு உள்பட பலர் இருந்தனர்.
