நெல் விதைப்பு, களை எடுப்புக்கு புதிய கருவிகள்! தஞ்சை உழவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஏக்கருக்கு 5 கிலோ விதைநெல் மட்டுமே கொண்டு நடவு செய்யப்படும் காகித நடவு முறையைக் கண்டுபிடித்து செயல்படுத்தி வருவது குறித்து கடந்த இதழில் எழுதியிருந்தோம். அந்தக் கருவியின் செயல்பாடுகள் குறித்தும், அவர் உருவாக்கிய மற்றொரு கருவியான புதிய முறை கோனோ வீடர் குறித்தும் அவர் தெரிவித்த தகவல்களின் தொகுப்பு இது! ``இந்த விதைச்சுருளை மண்ணில் பதிக்க ஒரு ஏக்கர் வயலுக்கு நான்கு மணி நேரம்தான் ஆகும். இந்த வேலையைச் செய்து முடிக்க இரண்டு பேர் இருந்தாலே போதும். இதனால் விவசாய வேலைகளுக்கான செலவுகள் கணிசமாக குறையும். காகித முறை நெல் நடவில் சேற்றில் காகிதம் அமுக்கப்பட்டு விதைநெல் பூமிக்குள் செல்கிறது. நேரடி நெல் தெளிப்பு முறையில் நெல்லானது பூமியின் மேல்பகுதியில் கிடக்கும். வயல்வெளியில் சுற்றித்திரியும் பறவைகள், மயில்கள், பூச்சிகள், எலிகள் உள்ளிட்ட உயிரினங்கள் விதைநெல்லைச் சாப்பிட்டு விடுகின்றன. மீதமுள்ள நெல்மணிகள் மட்டும்தான் முளைக்கும். இந்த ஒழுங்குமுறை காகித நெல்நடவு முறையில் நெல் மணியானது பேப்பரில் மடித்து வைக்கப்பட்டு இருப்பதால், முளைப்பு வரும் வரை வெளியே தெரியாது. இதை பறவைகள், மயில்கள்மற்றும் எலிகள் உண்ண முடியாது. இதன்மூலம் நாம் தெளிக்கக்கூடிய விதைகள் அனைத்தும் முளைத்து நல்ல மகசூலைத் தரும்.
மேலும் இந்த முறையில் ஒரு விதையை நடவு செய்யும்பொழுது, விதைகளின் மேல் வைக்கோல் மற்றும் எளிதில் மட்க கூடியவற்றை வைப்பதால் 100 சதவீதம் முளைப்புத்திறன் வந்துவிடும். இதனால் சிறந்த முளைப்புத் திறனுக்கான முறையாகவும் இது விளங்குகிறது. நடவு செய்த 10வது நாள் வேப்பம் புண்ணாக்கு மற்றும் கடலை புண்ணாக்கு ஆகியவற்றை ஏக்கருக்குப் 10 கிலோ வீதம் ஊற வைத்த கரைசலை தண்ணீர் மூலம் அதாவது மடை மூலமாகவும், ஆங்காங்கே ஊற்றுவதன் மூலமும் வேர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி பயிர் வளர்ச்சியை சீராக கொடுக்கச்செய்ய வேண்டும். இருபதாம் நாள் கோனோவீடர் வைத்து களைகளை அப்புறப்படுத்த வேண்டும். பின் ஏக்கருக்கு நவதானியங்கள் 10 கிலோ ஊறவைத்து முளைகட்டிய பின் நன்கு அரைத்து 5 கிலோ வேப்பம் புண்ணாக்குக்கரைசலை கலந்து வேர்வழியாக செலுத்த வேண்டும். 25ம் நாள் பூண்டு, வெற்றிலை, மிளகாய் தலா 5 கிலோவை நன்றாக அரைத்து வடிக்கட்டி நன்கு பயிர்கள் நனையும்படி தெளிக்க வேண்டும். 20 நாட்கள் இடைவெளியில் களைகளை அப்புறப்படுத்தினால் போதும். பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து அதிக சிம்புகள் வெளியாகி மகசூல் அதிகரிக்கும்.
களை எடுக்க தற்போது பயன்பாட்டில் உள்ள கோனோவீடர்களுக்கு பதிலாக நானே கண்டுபிடித்த 5 வகையான கோனோவீடர்களை பயன்படுத்திப் பார்த்தேன். இதன்மூலம் மிக எளிதாக ஒருவரே எவ்வளவு சேறும் சகதியும் இருந்தாலும் எளிதாக களைகளை அகற்ற முடிந்தது. எளிதாகக்களைகளை மடக்கி வயலில் அழுத்தி அதையே உரமாக மாற்றும் வகையில் களை எடுக்கும் கருவிகளை கண்டு பிடித்துள்ளேன். நான் உருவாக்கிய கோனோவீடர்களை வயலில் ஓட்டும்பொழுது பயிர்களின் வேர்கள் இயற்கையாகவே அறுந்து போகும். அவ்வாறு அறுந்து போகும்போது புதிய புதிய வேர்கள் முளைக்கும். ஏற்கனவே கூறியது போல அதிக வேர்கள் இருந்தால் அதிக சிம்பு வரும். அதிக சிம்பு வந்தால் அதிக வலுவான தூர்கள் கிடைக்கும். வலுவான தூர்கள் மூலம் அதிக நெல்மணிகள் கிடைக்கும். இதனால் அதிக மகசூலை பெறமுடியும். இதனால் நேரமும் மிச்சமாகிறது. செலவு குறைகிறது. அதிக மகசூல் கிடைக்கிறது.அருகில் உள்ள காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் இங்கு வந்து நேரடியாக இந்த கருவிகளின் செயல்முறை குறித்து அறிந்து செல்கிறார்கள். மேலும் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும் வருகிறார்கள். வெளி மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த காகித நடவு முறை இயந்திரத்தை நானே வடிவமைத்து தருகிறேன். மிக முக்கியமாக நான் கண்டுபிடித்த கோனோவீடர்களை எளிதாக ஒரே கையில் எடுத்துச்சென்றுவிட முடியும் என்பதால், இதையும் பல மாநில விவசாயிகள் தயார் செய்து தரச்சொல்லி வாங்கிச்செல்கிறார்கள். இதில் அடுத்த கட்டமாகபெரிய அளவில் செய்யமுயற்சிகள் செய்துவருகிறேன்’’ என மகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
ரமேஷ்: 91599 94285.
வழக்கமான முறையில் செய்யப்படும் நெல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 25 மூட்டைகள் கிடைக்கிறது என்றால் இந்த காகித நடவு முறையில் 28 மூட்டைகள் வரை கிடைக்கும். இதில் செலவு மிகக்குறைவு. லாபம் அதிகம்.