கரும்பில் இருந்து நாட்டுச்சர்க்கரை... நெல்லில் இருந்து விதை நெல்...
அம்மா உடம்பு சரியில்லாம இருந்தாங்க. நல்ல சத்தான அரிசி அவங்களுக்கு நல்லதுன்னு இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். 15 வருஷமா இயற்கை விவசாயம் செய்றேன். இப்போ 200 விவசாயிகளுக்கு மேல நம்மகிட்ட இருந்து விதை நெல் வாங்கறாங்க” என இயற்கை விவசாயத்துக்கு வந்த பின்னணியை உணர்ச்சிகரமாக கூறத்தொடங்கினார் சுரேஷ்குமார் கோடிசுந்தரம். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள டி.வி.புத்தூர் கிராமத்தில் 15 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறார். கரும்பை விளைவித்து நாட்டு சர்க்கரை உற்பத்தி, நெல்லை விளைவித்து விதைநெல் விற்பனை என கலக்கி வரும் சுரேஷ்குமாரை சந்தித்தபோது மேலும் தனது அனுபவம் குறித்து பேசினார்.
``நிலத்தை வளமாக்க ஒரு போகம் வழக்கமான பயிரிடுதலை நிறுத்திட்டு, சேறு அடிச்சி, வேர்க்கடலை,பச்சைப்பயறு, கொத்தமல்லி, எள், துவரை, சோளம் எல்லாம் முளைப்புகட்டி, ஏக்கருக்கு மொத்தமா 25 கிலோ விதைச்சோம். ரெண்டுதடவ பலதானியம் போட்டோம். பலதானியம் போட்டு மடக்கி உழுதுட்டா, உடனே விதைக்கக் கூடாது. கொஞ்சநாள் அவகாசம் குடுக்கணும். அது மக்கும்போது நிலம் லேசா சூடாகும். அப்போ ஒரு உழவு ஓட்டிட்டு காயப்போட்டு இன்னொரு உழவு ஓட்டினோம்னா நிலத்துல சத்துகள் நல்லா சேரும். முதல்ல ஆத்தூர் கிச்சலி சம்பா பண்ணோம். விளைச்சல் நல்லா இருந்தது. ரெண்டாவது வருஷம் கருப்புகவுனி, கருங்குறுவை எல்லாம் பண்ணோம். விளைச்சல் அமோகமா இருந்தது.
ஆத்தூர் கிச்சலி, தூயமல்லி, கறுப்புகவுனி, வாசனை சீரகசம்பா ரகங்களை பல ஆண்டுகளா பண்றோம். இயற்கைல பண்ணும்போது மெதுவா வளரும், கொஞ்சமா பச்சைகட்டும். ஆனா உயரமா வளரும். முதல்ல வேப்பம்புண்ணாக்கு போட்டோம். அப்புறம் ஒருவாரம் கழிச்சி மண்புழு உரம், கடலை புண்ணாக்கு எல்லாம் எருவுல கலந்து போட்டோம். முன்ன 15 நாளைக்கு ஒருதடவை கடலை புண்ணாக்கை தண்ணியில கரைச்சி வாமடையில வச்சிடுவோம். அது நீரோட்டத்துல கலந்து வயலெல்லாம் பாஞ்சிடும். இப்போ தொட்டியில இந்த புண்ணாக்கை கரைத்து நீர்மூழ்கி பம்ப் மூலமா புதிய முறைல தண்ணி பாய்ச்சறோம். நோய்த்தாக்குதல் வந்தா புங்கை எண்ணெய், வேப்பெண்ணெய், இல்லுப்பை எண்ணெய் கரைசல் அடிப்போம். பூச்சிகளைக் கட்டுப்படுத்த தென்னை மட்டையை வயல்ல நட்டு வச்சிடுவோம். அதுல பறவைகள் வந்து உட்கார்ந்து பூச்சி புழுக்களை சாப்பிடும். பூச்சித்தொல்லை குறையும்” என்றவர், நெல் பயிரிடுவது பற்றி விளக்கினார்.
``ஒரே பயிரையே சார்ந்திருக்கக்கூடாதுன்றதால நெல் 10 ஏக்கரும், கரும்பு 5 ஏக்கரும் போட்டிருக்கோம். மொதல்ல சிஓசி 8603 ரக கரும்பு போட்டோம். அடியுரமா ஏக்கருக்கு 5 டன் எரு அடிச்சேன். கடலை புண்ணாக்கு, மீன் அமிலம், பஞ்சகாவ்யா எல்லாம் கொடுத்தோம். 6 மாசத்துல மறுபடியும் புண்ணாக்கு போட்டு மண் அணைச்சோம். அரையடிக்கு தண்ணி கட்டிட்டு, மண்ல ஈரம் இருக்கும்போது இந்தக் கரைசலை ஊத்தினோம். இப்போ கரும்பு நல்லா வளந்து 20 புள் (கணு) அளவுக்கு வந்துடுச்சி. 24 புள் வந்தா கரும்பு வெட்டிடலாம்” என கரும்பு விவசாயம் செய்யும் முறையை விளக்கினார்.``வெற்றிகரமான விவசாயியா இருக்கணும்னா, விளைபொருளை மதிப்புக்கூட்டினா மட்டும்தான் சாத்தியம். பாரம்பரிய நெல்லை மதிப்புக்கூட்டி ஒரு பங்கை அரிசியாகவும், இன்னொரு பங்கை விதைநெல்லாகவும் மதிப்புக்கூட்டி விற்கறோம். நெல்லை அறுவடை பண்ணும்போதே விதைக்கு வேணுமா, அரிசிக்கு வேணுமான்றத பொறுத்து அறுவடை பண்ணனும்.
அரிசிக்குன்னா, வழக்கமான அறுவடைக்கு 5 நாள் முன்னாடியே கொஞ்சம் பச்சையா இருக்கும்போதே அறுவடை பண்ணிடணும். விதைக்கு வேணும்ன்னா அறுவடை நாள் தாண்டி, ஓரளவு முத்தினப்புறம்தான் அறுவடை பண்ணனும். நெல்லை கையால அறுத்து அடிச்சிடுவோம். இல்லுப்பைப்பூ சம்பா, வாசனை சம்பாலாம் நல்லா விக்குது. உள்ளூர்ல சின்ன மார்டன் ரைஸ்மில்ல குடுத்து நெல்லை அரிசியாக்குறோம். அவங்கதான் 5 மூட்டை 10 மூட்டை இருந்தாலும் புழுங்கலரிசியா மாத்தித் தருவாங்க. விதை நெல்லுக்கு நெல்லை ரொம்ப நாள் வெயில்ல காயவைக்கக்கூடாது. அப்டி காய்ஞ்சா கெட்டியாகிடும். முளைப்புத்திறன் குறையும். விதை நெல்லை ஸ்டாக் வைக்கும்போது, தூத்தி, ஈரப்பதம் 12%ல பராமரிச்சி கட்டி வைக்கணும். அப்டியே சாக்குல போட்டு கட்டினா பூச்சிலாம் வரும். அதனால, விதை நெல்லுக்குன்னு தனியா பேக் (Hermetic Grain storage bag)ல போட்டு வச்சா பல மாதங்கள் நல்லா இருக்கும். இதெல்லாம் கவனமா செஞ்சா, கூடுதல் விலை கிடைக்கும். கூடுதல் லாபமும் கிடைக்கும்” என நெல்லை மதிப்புக்கூட்டுவதன் நன்மைகளை விளக்கினார்.
கரும்பை மதிப்புக்கூட்டுவது பற்றி “நாட்டுச்சர்க்கரை காய்ச்சும் கொப்பரை (வாணலி போன்ற பெரிய இரும்பு பாத்திரம்) பக்கத்துலயே இருந்தா இப்டி கரும்பு போடுறது நல்லது. இங்க அரை கிலோ மீட்டர் தூரத்துலயே குடிசைத்தொழில்ல வெல்லம் காய்ச்சறவங்க இருக்கறாங்க. ஒரு கொப்பரைக்கு 2000 ரூபாய் கேப்பாங்க. ஒரு நாள்ல 4 டன் கரும்பை சர்க்கரையா காய்ச்சிடுவாங்க. நாட்டுசக்கரைக்கு செல்ஃப் லைஃப் கம்மி. கை வைக்காம, ஈரக்காத்து படாம பேக் பண்ணணும். 50 டன் கரும்பு வெளைஞ்சா, காய்ச்சும்போது5 டன் சர்க்கரை கிடைக்கும். சர்க்கரையை மூட்டை மேல மூட்டை அடுக்கக்கூடாது. ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவயாவது மூட்டையை பெரட்டி பெரட்டி போடனும். இதனால சக்கரை கட்டியாகாம ஈரம் சேராம இருக்கும். பேக் பண்ணதுலர்ந்து 3 மாசத்துல சாப்ட்டுடணும். அதனால உடனே விக்கிறது நல்லது. எங்க நாட்டுச்சர்க்கரை இப்போலாம் ஒரு மாசத்துலயே வித்துடுது’’ என்றார்.
தொடர்புக்கு:
சுரேஷ்குமார் கோடிசுந்தரம்:
94496 17689, 80735 73403.