நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்றிய குழு ஆய்வு..!!
செங்கல்பட்டு: நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்றிய குழு இன்று ஆய்வு மேற்கொண்டது. டெல்லா மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை தொடர்ந்து நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு சார்பில் 3 குழுக்கள் இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்தது. அந்நிபுணர் குழு இன்று (25.10.2025) முதல் தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படவுள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து மாவட்டந்தோறும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி முதல் குழு 25.10.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டத்திலும், 26.10.2025 அன்று திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், இரண்டாவது குழு 25.10.2025 அன்று தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 26.10.2025 அன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், 27.10.2025 அன்று கடலூர் மாவட்டத்திலும் மற்றும் மூன்றாவது குழு 25.10.2025 அன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும் 26.10.2025 அன்று மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் தொடர்பாக முதல் குழு செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டது. கீரப்பாக்கம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒன்றியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஒரகடம், படாளம் பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்தனர். நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 17%லிருந்து 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது.