சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் உருவ படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
லண்டன்: சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் உருவ படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 'பல நூற்றாண்டு காலமாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதற்கு உதாரணம்தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறப்பு" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருவார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் ஒருபகுதியாக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் உருவ படத்தை திறந்து வைத்தார்.
பெரியாரின் உருவ படத்தை திறந்து வைத்து முதல்வர் ஆற்றிய உரையில்; "பல நூற்றாண்டு காலமாக உலகின் தலைசிறந்த அறிவாளிகளை உருவாக்கியுள்ளது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதற்கு உதாரணம்தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறப்பு. உலகம் முழுவதும் பயணம் செய்து சுயமரியாதை கருத்தை பரப்பியவர் பெரியார். சமூகத்துக்கான வாழ்வியல் தத்துவத்தை உலகத்துக்கு எடுத்துரைத்தவர்.
ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர். பகுத்தறிவு, சமத்துவம், பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டவர். தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த சொல் சுயமரியாதை. யாரும் யாருக்கும் அடிமை கிடையாது என்ற தத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர். பெரியார் சமூகத்தில் விதைத்தது நாத்திகம் இல்லை, பகுத்தறிவு. அதனால்தான் 'நானே சொன்னாலும் உன் புத்திக்கு சரியென்று பட்டதை ஏற்றுக்கோ, இல்லனா விட்டுவிடு' எனச் சொன்னார்.
எல்லாத்தையும் கேள்வி கேட்கணும், விடையை கண்டுபிடிக்கணும், எதையும் லாஜிக்கா அணுகணும் என்ற அறிவியல் சிந்தனையைத்தான் பரப்பினார். பெரியார் யார் என்று கேட்டால், அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டிய விஷயம் சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், மானுட பற்று, ரத்த பேதமில்லை, பால் பேதமில்லை, சுய முன்னேற்றம், பெண்கள், முன்னேற்றம், சமூக முன்னேற்றம், அறிவியல் மனப்பான்மை என்று பெரியாரித்தை அறிமுகம் செய்ய வேண்டும். பரந்து விரிந்த அறிவுக் கடலான அவருடைய சிந்தனைகளை உள்வாங்க இது உதவும்" என பேசினார்.