ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் உரை திராவிட இயக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் துவக்கம்: திமுக பெருமிதம்
சென்னை: உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவது திராவிட இயக்க வரலாற்றில் மாபெரும் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக அமைய உள்ளது என்று திமுக கூறியுள்ளது.
திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில்,‘1968ம் ஆண்டு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார் அண்ணா; தற்போது, உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார் திராவிட நாயகர். அய்யா-அண்ணா- முத்தமிழறிஞரின் வழியில் சமத்துவ-சமதர்ம தமிழ்நாட்டை உருக்குவோம்-திராவிட இயக்கத்தின் கொள்கைகளை உலகெங்கும் எடுத்துச் செல்லுவோம்,’என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், திமுக தனது சமூக வலைத்தளம் பதிவில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் தமிழ்நாட்டின் முதல் முதல்வர் என்ற பெருமையை பெற உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திராவிட இயக்க வரலாற்றில் மாபெரும் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக இந்நிகழ்வு அமைய உள்ளது. சுய மரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருப்பது, 1968ல் பேரறிஞர் அண்ணா யேல் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க உரையை நினைவூட்டுகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் விதைத்த சமூகநீதி விதைகள் இன்று முளைத்து பரந்து விரிந்த ஆழமரமாய் உயர்ந்து நிற்பதற்கான சான்றாகவே இந்த நிகழ்வு அமைய உள்ளது,’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.