‘‘ஆர்கானிக் பொருட்களே ஆரோக்கியத்திற்கு சிறந்தது’’ : பிரசன்னா ஸ்ரீவிஜயன் தம்பதி
கோவிட் காலகட்டத்திற்கு பிறகு மக்களிடம் நிறைய ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்பட்டுவிட்டது. அதில் ஒன்று தான் இயற்கை முறையில் விளைந்த ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்தி வரும் கலாச்சாரம். ‘உணவே மருந்து’ என்கிற எண்ணங்கள் நிறைய மாற்றங்களை உருவாக்கி வருகிறது. எங்களுக்குமே நஞ்சில்லாத பொருட்களை இயற்கை விவசாயிகளிடமிருந்து விளைவித்து வாங்கி மக்களுக்கு நிறைவாகஅளிக்க வேண்டும் என்பதே எங்களது தாரக மந்திரம். அதை நோக்கியே எங்களது அடுத்த கட்ட பயணங்கள் இருந்தது என்று மிகுந்த சமூக அக்கறையோடு பேசுகிறார்கள் சென்னை போரூரில் வசிக்கும் பிரசன்னலஷ்மி மற்றும் ஸ்ரீ விஜயன் தம்பதி. இன்ஜினியரிங் முடித்து விட்டு சாப்ட்வேர் பணிகளில் வேலை செய்து வந்த இவர்களை தற்போது ஆர்கானிக் பொருட்களை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து சென்னையில் விற்பனை செய்து அசத்தி வருகின்றனர். பிரசன்னா விஜயன் தம்பதி இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் அதில் தயாரிக்கப்படும் நஞ்சில்லாத மளிகை பொருட்கள் மற்றும் ஆர்கானிக் முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள் குறித்தும் அவர் நம்மிடையே பகிர்ந்து கொண்டதிலிருந்து...
ஆர்கானிக் பொருட்களுக்கான விற்பனை வாய்ப்புகள் மற்றும் வரவேற்புகள் எப்படி இருக்கிறது?
ஆர்கானிக் பொருட்களை தொடர்ந்து வாங்கி உபயோகப்படுவர்களுக்கு அதன் தனித்துவமும் சிறப்புகளும் குறித்து நன்றாகவே தெரியும். இதனால் பல்வேறு உடல்நல மேம்பாடுகளும் ஆரோக்கியமும் கூடுதலாக இருக்கும். தற்போது இயற்கை விளை பொருட்களை பயன்படுவோர்களின் புரிதல்கள் காரணமாக பயனாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதற்கான தேவைகளும் அதிகரித்து வருகிறது. முதலில் எங்களுடைய இணையதள வெப்சைட் மூலம் தான் முதலில் விற்பனையை துவங்கினோம். அதன் மூலம் ஆர்டர் செய்பவர்களுக்கு வீடுகளுக்கே நேரடியாக பொருட்களை அனுப்பி வைக்கும் சேவைகளை துவங்கினோம். தற்போது நிறைய அடுக்குமாடி குடியிருப்புகளில் ஸ்டால்கள் அமைத்து எங்களது தயாரிப்பு பொருட்களின் சிறப்பம்சம் மற்றும் தரம் குறித்து அறிமுகப்படுத்தி வருகிறோம். ரோட் ஷோ மூலமாகவும் இது குறித்த புரிதல்களையும் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறோம். மேலும் சென்னையில் பல சூப்பர் மார்க்கெட்டிலும் எங்களது தயாரிப்புகள் கிடைக்கும். அதன் மூலமாகவே எங்களது பெரும்பாலான விற்பனைகள் நடைபெற்று வருகிறது. சென்னை ராமாபுரத்தில் ரீடெயில் ஷோரூம் ஒன்றை திறந்து நேரடியாக விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கான வரவேற்பு எங்கள் பகுதி மக்களிடையே நன்றாகவே இருக்கிறது. மேலும் எங்களது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்கிறோம். அதற்கான வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கி பல்வேறு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
இயற்கை முறையில் விளைவிக்க என்னென்ன பொருட்களை விற்பனை செய்து வருகிறீர்கள்?
பாரம்பரியமுள்ள பல்வேறு அரிசி வகைகள், பலவிதமான சமையல் எண்ணெய்கள், அனைத்து பருப்பு வகைகள், மாவு வகைகள், நட்ஸ் வகைகள், மசாலா பொருட்கள், உப்பு மற்றும் நாட்டு சர்க்கரை என பல வகையான ஆர்கானிக் பொருட்கள் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது. இன்னும் சில வகை புதிய பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற யோசனைகள் உள்ளது. அதற்கான முன் தயாரிப்பு பணிகள் செய்து வருகிறோம். மலைப்பகுதியில் கிடைக்கும் ஆர்கானிக் வகை தேன்கள் , சுத்தமான நெய் வகைகள் விற்பனைக்கு வர இருக்கிறது. அதே போன்று எங்கள் ஆர்கானிக் விளைபொருட்களை வைத்து சுவையான ஆரோக்கியமான சத்துமாவினை தயாரித்து விற்பனை செய்யவும் திட்டமிட்டு, அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். அதனையும் விரைவில் சந்தைப்படுத்த இருக்கிறோம்.
இயற்கையான விளை பொருட்கள் எங்கு கிடைக்கிறது?
இந்த ஆர்கானிக் பொருட்களை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான். அதற்கு பின்பு எங்களது மென்பொறியாளர் பணியை விட்டு விட்டு இதில் தீவிரமாக இறங்கினோம். முதல் இரண்டு வருடங்கள் இந்த தொழில் குறித்த தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தோம். அதற்காக சர்டிபைடு செய்யப்பட்ட விவசாய பண்ணைகளில் நேரடியாக சென்று பொருட்களின் தரத்தினை பரிசோதித்து பார்த்தோம். நிறைய பொருட்களை வாங்கி நாங்களே நேரடியாக உபயோகித்தும் பார்த்து பயன்படுத்திய பிறகே இத்தொழிலில் இறங்கினோம். முழுக்க இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை தர நிர்ணயத்திற்கு பிறகே விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். நஞ்சேயில்லாத இயற்கை விளைபொருட்களை அளிப்பது தான் எங்களது நோக்கம். அதற்கான சீரிய முறையில் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.
ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் எண்ணங்கள் ஏற்பட்டது எப்போது?
நிறைய பேர் மளிகை பொருட்களோடு இணைத்து சமைக்க தேவையான காய்கறிகளை ஆர்கானிக்காக வாங்கி தர இயலுமா என கேட்டார்கள். அதனோடு ஆர்கானிக் பழங்களையும் வாங்கி தர பலரும் மகிழ்வோடு வாங்கி கொள்கிறார்கள். இயற்கை முறையில் விளைந்த ஆர்கானிக் மளிகை பொருட்களோடு, தொடர்ந்த வாடிக்கையாளர்கள் ஆதரவின் பெரும் உத்வேகத்தில் இயற்கையாய் விளைவித்த காய்கறி மற்றும் பழங்கள் கீரை வகைகளை தற்போது தொடர்ச்சியாகவே விற்பனை செய்ய துவங்கியுள்ளோம். அதற்கும் நிறைய வாடிக்கையாளர்கள் இடையே நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது வாரம் இரு நாட்கள் அதற்கான ஆர்டர்களை போன் மூலமாக பெற்றுக்கொண்டு, அவர்களுடைய வீடுகளுக்கே காய்கறி கீரைகள் மற்றும் பழ வகைகளை வரவழைத்து அனுப்பி தருகிறோம். எங்களது காய்கறிகள் மற்றும் பழங்கள் எந்தவித கெமிக்கல்கள் இல்லாத இயற்கை முறையில் விளைவிப்பதால் அதிக நாள் வைத்து பயன்படுத்த இயலாது என்பதால் உடனே பயன்படுத்தி விடவேண்டும் என வாரத்தில் இருமுறை ஃப்ரெஷ்ஷாக ஆர்டர் எடுத்து வரவழைத்து அனுப்புகிறோம். இதனை உபயோகித்து இதன் தனித்துவத்தை உணர்ந்தவர்கள் தொடர்ந்து வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
தற்போது இத்தகைய இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களுக்கான விழிப்புணர்வு நிறைய ஏற்பட்டு வருகிறது. நிறைய பேர் தொடர்ந்து உபயோகிக்க துவங்கினால் உற்பத்தி மற்றும் அதற்கான தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க சந்தை விலையும் கணிசமாக குறையும். இப்போதும் எங்களது தாளினி இயற்கை பொருட்களுக்கான ரெகுலரான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இன்னும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் பொருட்களுக்கான விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்கிற ஆர்வங்கள் இருக்கிறது. பலவருடங்களாக இராசாயன முறையில்தான் பொருட்களை விளைவித்து வரப்பட்டு வந்தது . சாதாரணமாக ஒரு நிலம் அதன் ராசாயன தன்மையினை இழந்து இயற்கை நிலமாக மாற குறைந்தபட்சமாக எட்டு ஆண்டுகள் கூட ஆகும். இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை முறை விளைபொருட்களையும் உபயோகித்து ஆரோக்கியமாக வாழ்ந்து இதற்கான சந்தைகளையும் அதிகரித்தால் நமது வருங்கால சந்ததிகளின் வாழ்வு வளம் பெறும் என்கிறார்கள் பிரசன்னா ஸ்ரீ விஜயன் தம்பதி.
- தனுஜா ஜெயராமன்.