ஆர்கானிக் இஞ்சி சாகுபடிக்கு பயனுள்ள தகவல்கள்!
இஞ்சியை இயற்கை வழியில் பயிர் செய்வதற்கான சில அடிப்படை பணிகள் குறித்து கடந்த இதழில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக சில கலவைகளை தயாரித்து பயன்படுத்தும் முறை குறித்து இந்த இதழில் காணலாம். இஞ்சியை நடவுசெய்து 30 முதல் 40 நாட்களில் ஏக்கர் ஒன்றுக்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பேக்டீரியா, சூடோமோனஸ், வீ.விரிடி, வீ.ஹார்சியானம், பேசிலஸ் சப்டிலஸ், பேசிலோமைசிஸ் ஆகியவை ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ வீதமும், தொல்லுயிர் கரைசல் 100 லிட்டர், அமுதக் கரைசல் 10 முதல் 20 லிட்டர் பஞ்சகவ்யா 3 முதல் 10 லிட்டர், மோர் கரைசல் 3 முதல் 10 லிட்டர், இஎம்2 1 முதல் 3 லிட்டர், ஹியூமிக் அமிலம் 1 முதல் 3 லிட்டர் ஆகியவற்றையும் கலந்து ஒரு நாள் வைத்திருந்து அடுத்த நாள் பாசனத்தில் பயன்படுத்த வேண்டும். இதை நிலவள ஊக்கி என்பார்கள். மாதம் ஒருமுறை வீதம் 6 முறை பயிர்வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப இதைப் பயன்படுத்த வேண்டும். நுண்ணுயிர்க் கலவை உரம் தயாரித்தும் பயன்படுத்தலாம். மாதம் ஒருமுறை வீதம் 6 முறை பயிரின் வளர்ச்சி தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும்.
இஞ்சி சாகுபடியில் மேட்டுப் பாத்தியில் மூடாக்கிடுதல் மிகமிக அவசியமாகும். இஞ்சித் துண்டுகளை விதைக்கும் தருணத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 5 முதல் 6 டன் இலை, தழைகளை மேட்டுப் பாத்தியின் மீது பரப்புதல் அவசியம். இவ்வாறு பரப்பிய தழைகள் மட்கி முடியும் தருணம் மேலும் 45 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை மூடாக்கு செய்தல் மிக அவசியமாகும். நுண்ணுயிர்க்கலவை உரம் பயன்படுத்தும்போது சருவு மூடாக்கை விலக்கி நுண்ணயிர்க் கலவை உரம் இட்டு மீண்டும் அதனை மூடுவது மிக அவசியமாகும். மூடாக்கு பயன்படுத்துவதால் மேட்டுப் பாத்தியில் சூரிய ஒளி நேரடியாகப்படுவது தவிர்க்கப்படும். மண்ணில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது.மழைக்காலங்களில் நிலவள ஊக்கி பயன்படுத்த இயலாது.
நுண்உயிர் கலவை உரம் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. மழை மிக அதிகமாக பெய்யும் சந்தர்ப்பங்களில் நுண்ணுயிர்க்கலவை உரம் 15 நாட்கள் இடைவெளியிலும் பயன்படுத்த வேண்டும். உயிர்ம இடுபொருட்களின் அளவையும் கூடுதலாக பயன்படுத்த வேண்டும். பொதுவாக இஞ்சி சாகுபடியில் பரவலாக தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்தப்படுகிறது. நிலவள ஊக்கியை இதனுடன் கலந்து தெளிப்பது மிக நல்ல பலன் அளிக்கும். இம்முறையில் மாதம் ஒருமுறை பயன்படுத்த கொடுத்துள்ள நிலவள ஊக்கியை 15 நாட்களுக்கு ஒரு முறை சரிபாதி அளவாக பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் இஞ்சிப்பயிரைத் தாக்கும் சாறு உறிஞ்சு பூச்சிகள், இலைத்தண்டுகளை சேதம் செய்யும் புழுக்கள் மற்றும் பூசண நோய்கள் கட்டுப்படும்.
பயிர் பாதுகாப்பு
செதிள் பூச்சி, இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான் போன்றவற்றைக் கட்டுப்படுத்த பாசியானா, மெட்டாரைசன் பயன்படுத்த வேண்டும். பூசண நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த சூடோமோனஸ் பயன்படுத்த வேண்டும். 100 லிட்டர் கரைசல் தயாரிக்க தொல்லுயிரி கரைசல் - 10 லிட்டர், அமுதகரைசல் - 10 லிட்டர், (அல்லது) பஞ்சகவ்யா 3 முதல் 5 லிட்டர், மோர்க் கரைசல் - 3 முதல் 5 லிட்டர் இஎம்2 1 லிட்டர், பூச்சி விரட்டி கரைசல் - 5 முதல் 10 லிட்டர், பாசியானா - 2 முதல் 3 கிலோ அல்லது 350 மில்லி 500 மில்லி வீதம் நீர் சேர்த்து 100 லிட்டர் கலவை தயாரித்து பயன்படுத்த வேண்டும். பயிருக்கு தெளிப்பு செய்வதற்கு முன்பு, தொல்லுயிர் கரைசலில் பாசியானாவும் அமுதக்கரைசலில் மெட்டாரைசமும் மோர்க்கரைசலில் சூடோமோனஸ் கலந்து வைக்கவும். அடுத்த நாள் தெளிக்கும்போது மேற்படி கரைசல்களை வடித்து பயன்படுத்தலாம். கரைசலின் அடிப்பகுதியில் கீழ்ப்படிவாக தங்கியுள்ள அடர்கரைசலை மக்கிய குப்பையில் கலந்து நுண்ணுயிர்க்கலவை உரம் தயாரிக்கும்பொழுது இதனையும் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.
தெளிப்பிற்கு மற்றொரு முறை
ஒவ்வொரு முறையும் மேற்படி குறிப்பிட்டுள்ள வகையில் தெளிப்பதில் உயிர்மவெளி இடுபொருட்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்தினால் இடுபொருள் செலவு கூடிவிடும். இந்த செலவை குறைக்க கீழே விவரிக்கப்பட்டுள்ள முறையில் கரைசல் தயாரிக்கவும்.இதற்கு வேப்ப எண்ணெய் 1 லிட்டர், திரவ வடிவ சோப்பு கலவை - 200 மி.லி தேவைப்படும். வேப்ப எண்ணெயில், திரவ வடிவ சோப்பு கலவை சேர்த்து குச்சியால் நன்கு கலக்கவும். கரைசல் பழுப்பு நிறமாக மாறும். வேப்ப எண்ணெய் நீரில் கரையக் கூடியதாக மாறும்.
புங்கன் எண்ணெய்க் கரைசல்
இதற்கு புங்கன் எண்ணெய் - 1 லிட்டர், திரவ வடிவ சோப்பு கலவை - 200 மி.லி தேவை. மேற்குறிப்பிட்ட முறையில் இதை நன்கு கலக்கினால் புங்கன் எண்ணெய் நீரில் கரையக்கூடியதாக மாறும்.
தெளிப்பதற்கு 100 லிட்டர் கரைசல் தயாரித்தல்
வேப்ப எண்ணெய் கரைசல் - 350 மி.லி, புங்கன் எண்ணெய்க்கரைசல் - 350 மி.லி, தொல்லுயிர் கரைசல் - 10 லிட்டர், பூச்சி விரட்டி கரைசல் - 5 முதல் 10 லிட்டர் வீதம் நீர் சேர்த்து 100 லிட்டர் கலவை தயாரித்து பயன்படுத்த வேண்டும்.
(அடுத்த இதழிலும் தொடரும்)