இயற்கை வேளாண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது பயிர் விளைச்சலை பெருக்கும் பசுந்தாள் உரம்
*மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பை குறைக்கிறது
விருதுநகர் : விவசாயத்தில் உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதால் விளைச்சல் பெருகும். எனவே உரங்களின் பயன்பாட்டு திறன் அதிகரிப்பு வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: விவசாய பயிர்களுக்கு உரமிடுத்தலுக்கான அட்டவணை என்பது, மண் ஆய்வின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
கார மண்ணிற்கு அமில உரங்கள், அமில மண்ணிற்கு கார உரங்களை அளிப்பது போன்ற மண் எதிர் விளைவுகளை பொறுத்து உரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உரங்களை மேலோட்டமாக தெளிக்காமல், 3 முதல் 4 செ.மீ அளவிற்கு விதையின் அருகிலோ அல்லது அடியிலோ இட வேண்டும். இதனால் களை வளர்ச்சியை பெரிதும் தடுக்கலாம். மணி மற்றும் சாம்பல் சத்துக்கான உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
உரக்கலவை அட்டவணைப்படி உரங்களை கலக்கி முடிந்த அளவிற்கு அதே உரக்கலவையை இட வேண்டும். கடின மண் வகையில், தழைச்சத்து. உரத்தில் பாதி அளவு அடி உரமாக இட வேண்டும்.
உரமிட்ட 1 வாரத்திற்குள் அதிகம் நீர் பாய்ச்சுவதோ அல்லது விவசாய நிலத்தில் நீர் தேங்கி இருப்பதோ கூடாது. நீரை வடித்த பிறகும், களைகளை அகற்றிய பிறகும் மேல் உரம் இடுவது நலம்தரும். வறண்ட நிலங்களில் தழைச்சத்தை இலைவழியாக தெளிக்கலாம்.
அங்கக உரங்கள் அல்லது பசுந்தாள் உரங்களை 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இட வேண்டும். மண் உருண்டைகளில் யூரியா உள்ள உரங்களை ஆழ் தண்ணீரில் வளரும் பயிர்களுக்கு இட வேண்டும்.
விவசாயத்தில் நல்ல மகசூல் பெறுவதற்கு அடிப்படையானது மண்வளம், நீர் வளம், தரமான விதைகள் மற்றும் சரியான பருவம் ஆகியவை. ஒரே வகை பயிர்களை தொடர்ந்து பயிரிடுவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க பசுந்தாள் உரம் அல்லது பசுந்தழை உரம் பயிரிடலாம். மேலும் பசுந்தழை உரமிடுவதால் மண் அமைப்பை மேம்படுத்தி, நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்கிறது. மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பை குறைக்கிறது.
பயிர்கள் ஏதும் பயிரிடப்படாத நேரத்தில் வளர்க்கப்படும் பசுந்தழை பயிர்களால், களைச் செடிகளின் வளர்ச்சி குறைகிறது. காரத்தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு உதவுகிறது. வேர் முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.
பசுந்தாள் உரம் அல்லது பசுந்தழை உரம் என்பது இயற்கை வேளாண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக பயறு வகைப் பயிர்கள் இவ்வகையான பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஏனெனில் அவற்றின் வேர் முடிச்சுகளில் ரைசோபியம் பாக்டீரியா இருப்பதால், அவை வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன் போன்ற மூலப்பொருளை நில ஊட்டல் மூலம் மண்ணிற்கு வழங்குகிறது. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் உண்டாகும் நீர், மண் மாசுபாடு போன்றவை இந்த நடைமுறையால் தடுக்கப்படுகிறது.
பொதுவாக கொழிஞ்சி, சணப்பை, எருக்கு, புங்கம், வேம்பு, பூவரசு, தக்கைப் பூண்டு, அகத்தி, கொத்தவரை மற்றும் ஆடாதொடா ஆகியவை பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படும் பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள் ஆகும்.
இவற்றில் கொழிஞ்சி, சணப்பை போன்றவை வேளாண் நிலத்தில் பயிரிடப்பட்டு, அவை வளர்ந்து பூக்கும் முன்னரே அப்படியே மடக்கி உழவு பணிகள் மேற்கொண்டால் நிலத்துடன் சேர்க்கப்படுகின்றன. நிலத்தில் ஒரு பருவத்தில் பசுந்தாள் உரமிடுவது, அடுத்த பருவத்தின் விளைச்சலில் நல்ல முன்னேற்றம் தரும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.