இன்று உலக உடல் உறுப்பு தான தினம்: இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது: ஒன்றிய அரசிடம் இருந்து விருது 484 பேருக்கு அரசு சார்பில் மரியாதை சுமார் 70 சதவீதம் பேர் தானம் செய்கிறார்கள்
இன்றைய உலகில், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மனித உயிர்களைக் காப்பாற்றுவதற்கு புதிய வழிகளைத் திறந்து வைத்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று உடல் உறுப்பு தானம். ஒருவரின் உறுப்புகளை தானமாக வழங்குவது, மற்றவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், அவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கவும் உதவுகிறது. உடல் உறுப்பு தானம் என்பது ஒருவர் தனது உயிருடன் இருக்கும்போது அல்லது மூளை மரணத்திற்குப் பிறகு தனது உறுப்புகளை மற்றவர்களுக்கு இருக்கும் மருத்துவத் குறைபாட்டு வழங்குவதாகும்.
இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல், கண்கள், தோல் உள்ளிட்ட பல உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக வழங்கப்படலாம். இந்த உறுப்புகள், உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வாழ்க்கையை அளிக்கின்றன.இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், தேவையான உறுப்புகள் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது.
இந்த இடைவெளியைக் குறைக்க, உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மக்களின் பங்களிப்பு அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 2008ம் ஆண்டு முதல் முறையாக உடல் உறுப்பு தானம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். 2008ம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 7. அதன் பிறகு படிப்படியாக அதிகரித்து வந்த உடல் உறுப்பு தானம், கொரோனா தொற்று காலத்தில் மட்டும் குறைந்தது.
2023ம் ஆண்டு முதல் உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கடந்த ஆண்டு உச்சத்தை தொட்டது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒரு முக்கிய அறிவிப்பு காரணமாக அமைகிறது. அது உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு 2023 செப்டம்பர் முதல் மூளைச்சாவு அடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் பெறப்படும் நபர்களின் உடலுக்கு அவர்களின் இறுதி சடங்குகளின் போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு தான்.
தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்புக்கு கிடைத்த வரவேற்பு எதிரொலியாக தமிழ்நாட்டில் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகள் அதிகரித்தது. அதுமட்டுமின்றி, சட்டமன்ற அறிவிப்பு படி விரைவில் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் மேற்கொள்பவர்கள் பெயர் பதிய ஒரு சுவர் அமைக்கப்பட உள்ளது. அது ‘மாரியாதை சுவர்’ (HONOR BOARD) என்று அழைக்கப்பட உள்ளது.
2024ல் அதிக அளவில் உடல் உறுப்புகளை தானமாக பெற்று தமிழ்நாடு சாதனை படைத்தது. 2024ல் மொத்தம் 268 நன்கொடையாளர்களிடம் இருந்து 1,500 உடலுறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. பிறமாநிலங்களுடன் ஒப்பீடுகையில் இது அதிகபட்ச எண்ணிக்கை என ஒன்றிய அரசு தெரிவித்தது. மேலும் 2024ல் தனியார் மருத்துவமனையில் பெறப்பட்ட உறுப்பு தானத்தின் விழுக்காடு 45.52 என்ற நிலையில் அரசு மருத்துவமனைகள் பெற்ற உறுப்பு தானத்தின் விதம் 54.48 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் (TRANSTAN) உறுப்பினர் செயலராக பணியாற்றும் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: மூளை சாவு ஏற்பட்ட நபர்களிடம் இருந்து உறுப்பு பெறுவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்த திட்டத்திற்காக ஒன்றிய அரசிடம் இருந்து விருது பெற்றனர்.
உடல் உறுப்பு தானத்தில் கடந்த ஆண்டு புதிய சாதனை படைத்தோம். மொத்தம் 268 நன்கொடையாளர்களிடம் இருந்து 1,500 உடலுறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெற்றோம், வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு உடல் உறுப்பு தானம் ஒரே ஆண்டில் பெறதில்லை. இதற்கு உடல் உறுப்பு தானம் மேற்கொண்டவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை என்ற முதல்வர் சார்பில் வெளியிட்ட அரசு ஆணை ஒரு முக்கிய காரணம்.
இது வரை 484 அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டுள்ளது. இது சமுதாயத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பிறகு ‘மரியாதை அணிவகுப்பு’ நடத்தப்பட்டது. உறுப்புகளை தானம் செய்தவரின் உடலை, ஆம்புலன்ஸிற்கு மாற்றும் வரை மருத்துவர்கள், மருத்துவக் குழுவினர் அந்த அணிவகுப்பை நடத்தி மரியாதை செய்தனர்.
இந்த மூளை சாவு எந்த ஒரு குடும்பத்திலும் நடக்கக்கூடாது. குறைந்த வயது அல்லது நடுவயது நபர்கள் மூளை சாவு அடையும் போது அந்த குடும்பத்திற்கு என்ன நடக்கிறது என்று கூடாது முழுமையாக தெரியாது. அந்த நேரத்தில் உடல் உறுப்பு தானம் பற்றி பேசுவது நல்லது இல்லை. அதனால் இதனை பற்றி குடும்பத்திற்கு எடுத்துரைக்கஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் அந்த குடும்பத்திற்கு விளக்கம் அளித்து உடல் உறுப்பு பெறுவார்கள்.
அந்த நேரத்தில் உடல் உறுப்பு தானமாக அளிக்கிறேன் என்ற தெரிவிக்கும் குடும்பத்தாருக்கும் மரியாதை செய்வதற்கும், இறந்தவருக்கு மரியாதை செய்வதற்கும் இது போன்று மேற்கொள்ளப்படுகிறது. அரசு, அதிகாரிகள், மருத்துவக் குழுக்கள், ஊடகங்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு அல்லது மீண்டும் மீண்டும் அதை பற்றி பேசுவதால் மக்களுக்கு உடல் உறுப்பு தானம் பற்றி புரிதலும், அறிவும் ஏற்படுகிறது. மற்ற மாநிலத்தை ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளை மற்ற மாநிலம் பின்பற்றுகிறது. இந்த உடல் உறுப்பு தானம் மேற்கொள்பவர்களுக்கு அரசு மரியாதை என்ற திட்டத்தை ஒடிசா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றுகின்றனர். தமிழக மக்களிடையே விழிப்புணர்வு சற்று அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் மூளை சாவு அடைந்த உடன் உறுப்பு தானம் செய்கிறார்கள். இருப்பினும் இன்னும் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.
மூளை சாவு அடைந்தவர்கள் உறுப்பு மண்ணுக்கு இல்லது நெருப்புக்கு செல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் என்ற தகவல் மக்களுக்கு சென்றடைய வேண்டும். மூளை சாவு அடைவிட்டார்கள் என மருத்துவர்கள் மூச்சுத்திணறல் சோதனை (apnea test) மேற்கொள்ளுவார்கள் அதற்கு பிறகு தான் உறுதி செய்வார்கள். சிறுநீரகத்திற்கு தான் அதிக தேவை உள்ளது கிட்டத்தட்ட 7000 மேற்பட்டவர்கள் காத்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* உறுப்பு தானம் மேற்கொள்ளும் வழிகள்
ஒருவர் உடல் உறுப்பு தானம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தால் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் இளையத்தளத்திற்கு https://transtan.tn.gov.in/index.php சென்று பதிவு செய்து விடலாம். ஆதார் தகவல், எந்த உறுப்பு தானம், செல்போல் எண் உள்ளிட்ட தகவல் கேட்டும்.