ரூ.6 கோடி மோசடி வழக்கில் விதிமீறி ஜாமீன்; 2 நீதிபதிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உத்தரவு: உச்சநீதிமன்றம் அதிரடி நடவடிக்கை
புதுடெல்லி: உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி மோசடி வழக்கில் கைதான தம்பதிக்கு ஜாமீன் வழங்கிய 2 நீதிபதிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிடம் ரூ.6 கோடி மோசடி செய்ததாக தம்பதி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைதான அவர்கள், ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி, டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அந்த தம்பதிக்கு ஜாமீன் வழங்கினார். இந்த உத்தரவை கர்கர்டூமா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியும் உறுதி செய்தார். இது நீதித்துறை மரபுகளை மீறிய செயல் எனக் கூறி, இந்த ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் சட்டவிரோதமாகவும், தவறான முறையிலும் ஜாமீன் வழங்கிய பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி மற்றும் அந்த ஜாமீனை உறுதி செய்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆகிய இருவருக்கும் சிறப்பு நீதித்துறை பயிற்சி அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பயிற்சி குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ‘நீதிமன்ற நடவடிக்கைகளை எவ்வாறு சரியாக நடத்துவது மற்றும் உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு எவ்வாறு மதிப்பளிப்பது’ என்பது குறித்து இந்த பயிற்சியின்போது அவர்களுக்கு விளக்கப்படும். ஜாமீன் பெற்ற தம்பதி உடனடியாக சரணடைய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த வழக்கில் விசாரணை அதிகாரியின் பங்கு குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதித்துறை பொறுப்புடைமையை உறுதி செய்யவும், கீழ் நீதிமன்றங்கள் சட்டக் கோட்பாடுகளையும், உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.