ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தது பிளாஸ்க் பார்சலில் வந்ததோ கல்
*காரியாபட்டியில் அதிர்ச்சி
காரியாபட்டி : ஆன்லைனில் பிளாஸ்க் ஆர்டர் செய்வருக்கு கல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் பிளாஸ்க் பாட்டில் ஆர்டர் செய்துள்ளார். நேற்று அவரது முகவரிக்கு பார்சல் வந்து சேர்ந்தது. பார்சலை ஆர்வத்துடன் பிரித்து பார்த்தபோது, அதில் பிளாஸ்க்கிற்கு பதிலாக கல் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ்குமார், உடனே பார்சல் கொண்டு வந்தவரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், இது பற்றி எங்களுக்கு தெரியாது. கம்பெனி கொடுக்கும் பார்சலைத்தான் டெலிவரி செய்கிறோம் என்று தெரிவித்தார். இதையடுத்து சுரேஷ்குமார், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் பிளாஸ்க் ஆர்டர் செய்தவருக்கு கல் வந்த சம்பவம் காரியாபட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.