பூத்து குலுங்கும் ஆர்கிட் மலர்கள்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பல்வேறு வகையான ஆர்கிட் மலர்கள் பூத்து காணப்படுகிறது. ஆர்கிடேசி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த பூக்கும் தாவரங்களான இவை, தாவர குடும்பங்களிலேயே 2வது மிகப்பெரிய பூக்கும் தாவர குடும்பமாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், வடகிழக்கு இந்திய பகுதிகளிலும் இயற்கையாக காணப்படுகிறது. அதில், 763 பேரினங்களும், 28 ஆயிரம் சிற்றினங்களும் காணப்படுவதாக கூறப்படுகிறது. இம்மலர்கள் பூத்த பின்னர் பல நாட்கள் வாடாமல் இருக்கும்.
ஆர்க்கிட் வனப்பகுதிகளில் காணப்படுவது மட்டுமின்றி, நாடுகாணி ஜீன்பூல் தாவரவியல் மையம், ஊட்டி கேர்ன்ஹில் வனப்பகுதி, அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது மட்டுமின்றி ஆய்வுக்கு வரும் மாணவர்களின் ஆராய்ச்சிக்கும் உதவியாக உள்ளது. இதனிடையே தாவரவியல் பூங்காவில் தனியாக வளர்க்கப்பட்டு வரும் பல வண்ண ஆர்க்கிட் மலர்கள் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை பூங்காவிற்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்வதுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.