ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு 13 மாவட்டத்தில் கனமழை பெய்யும்
சென்னை: தென்மேற்கு பருவமழை விரைவில் விடைபெற உள்ள நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல் விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும்.
அதன் தொடர்ச்சியாக திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் 17ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இன்று முதல் 16ம் தேதி வரை தமிழகம் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2-3 செல்சியஸ் படிப்படியாக குறையும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.