அதிமுகவில் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையனுடன் ஓபிஎஸ் திடீர் பேச்சு: எடப்பாடி தனக்கு தானே சாவுமணி அடித்துக்கொண்டார் என நிர்வாகிகள் கொந்தளிப்பு
கோபி: எடப்பாடி கட்சி பதவியை பறித்த நிலையில், செங்கோட்டையனுடன் செல்போனில் ஓபிஎஸ் திடீரென பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி தனக்கு தானே சாவுமணி அடித்துக்கொண்டார் என செங்கோட்டையனை சந்தித்த பின் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் தெரிவித்தனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்த நிலையில், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கோபிசெட்டிபாளையம் இல்லத்தில் செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். நேற்று நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் செங்கோட்டையனை சந்தித்து சால்வை அணிவித்தும், மாலை அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஓபிஎஸ் அணியின் நீலகிரி மாவட்ட செயலாளர் பாரதியார் கூறுகையில், ‘அதிமுகவை எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறி கபளீகரம் செய்ததால் கட்சி தத்தளித்து கொண்டிருக்கிறது. தொண்டர்கள் சார்பாக செங்கோட்டையனுக்கு நன்றி சொல்ல வந்திருக்கின்றோம். எடப்பாடி பழனிசாமி திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவார். செங்கோட்டையனை பதவி நீக்கி இருப்பதன்மூலம் எடப்பாடி இல்லாத அதிமுகவை உருவாக்க அவரே வழி வகுத்து விட்டார், இன்று அவர் போட்ட கையெழுத்து என்பது அவரை அவரே நீக்கம் செய்து கொண்டதற்கு சமமான கையெழுத்தாகும். செங்கோட்டையனை நீக்கியது தான் என்ற ஆணவத்தில் எடப்பாடி பழனிசாமி ஆடிக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அவருக்கான சாவு மணியை அவரே அடித்து விட்டார்’ என்றார்.
இந்நிலையில், செங்கோட்டையன் சந்தித்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகளில் ஒருவரது செல்போன் மூலம் செங்கோட்டையனுடன், ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது, செங்கோட்டையன் தனி அறைக்கு சென்று அந்த போனில் ஓபிஎஸ்சுடன் 5 நிமிடம் பேசினார். எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையனுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓபிஎஸ், டிடிவி உட்பட பலர் வரவேற்பு தெரிவித்து உள்ள நிலையில், செங்கோட்டையனுடன் ஓபிஎஸ் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றிணைய கூடாது என நினைப்பது எடப்பாடி மட்டுமே பதவியை பறித்தது சர்வாதிகாரத்தின் உச்சம்: 10 நாட்களுக்கு பின் சந்திப்பேன் - ஓபிஎஸ்
போடியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவின் மூத்த முன்னோடியான செங்கோட்டையன், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், கட்சியின் தலைமை நிலைய செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்தவர். அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் கட்சி இணைய வேண்டும் என வலியுறுத்தினார். கட்சியில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமும் அதுவாகத்தான் உள்ளது. பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என 10 நாள் காலக்கெடு விதித்ததால், செங்கோட்டையனை கட்சி பதவிகளில் இருந்து நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சபட்சம். சர்வாதிகாரத்தின் உச்சநிலைக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டவர்கள் மீதுதான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்.
தொடர் தோல்வியில் அதிமுக உள்ளது. இது தேவைதானா?அதிமுக ஒன்றிணையாமல் இருப்பதே அனைத்து தோல்விகளுக்கும் காரணம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் தொண்டர்கள் அனைவரின் கருத்து. அதிமுக ஒன்றிணைய கூடாது என நினைப்பது எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். இன்னும் 10 நாள் கழித்து செங்கோட்டையன் எடுக்கும் முடிவை தொடர்ந்து எங்களது நடவடிக்கை இருக்கும். அவரது முயற்சிக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 10 நாட்களுக்கு பின் அவரை சந்திப்பேன். இவ்வாறு கூறினார்.