ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை கட்சியில் சேர்க்கும் திட்டம் அதிமுகவில் சமரச முயற்சி தோல்வி: அமித்ஷா-எடப்பாடி சந்திப்பில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்
சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்களை சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் விவகாரத்தை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரவு சந்தித்து பேசினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக எடப்பாடி கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பேச்சு தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக உடைந்து கிடக்கிறது. ஆனாலும், அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என 10 தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துள்ளார். இதனால் பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் இணைத்து அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனாலும், எடப்பாடி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
தமிழகத்தில், 2021ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அதிமுக பாஜ கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி உடைந்தது. அதிமுக தனித்து போட்டியிட்டு தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. சில தொகுதிகளில் 3 அல்லது 4வது இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டது. இருந்தபோதும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் பாஜ கூட்டணியில் இணைந்து சுயேச்சையாக ராமநாதபுரம் மற்றும் தேனியில் போட்டியிட்டனர்.
அந்த தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடமும் பிடித்தனர். இதனால் அவர்கள் மீதான கோபம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகரித்தது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று பாஜ திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் பலனாக அதிமுக - பாஜ கூட்டணி உருவாகியுள்ளது. அந்த கூட்டணியை வலுப்படுத்த பாஜ தலைமை தீவிரமாக செயல்பட்ட நிலையில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்தார்.
தொடர்ந்து கூட்டணியும் உறுதி செய்யப்பட்ட நிலையில் தங்களை புறக்கணிப்பதாக கூறி ஓபிஎஸ், டிடிவி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினர். அவர்கள் மீண்டும் வரவேண்டும் என பாஜ வலியுறுத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் வலியுறுத்தினார். எடப்பாடிக்கு 10 நாள் கெடுவும் விதித்தார். இதனால் எடப்பாடி பழனிசாமி கோபம் அடைந்து, செங்கோட்டையனின் மாவட்ட செயலாளர் பதவி உள்ளிட்ட கட்சி பதவிகளை பறித்தார். அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து செங்கோட்டையன் கடந்த வாரம் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லியில் பாஜ மூத்த தலைவரும் ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம், அதிமுக உட்கட்சி பிரச்னை, அதிமுக - பாஜ கூட்டணியால் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து திரும்பிய செங்கோட்டையன், விரைவில் நல்லது நடக்கும் என்று கூறினார். செங்கோட்டையன் விதித்த கெடுவும் நேற்று முன்தினத்துடன் முடிந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, \\”ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கவலைக்கிடமாக்கி ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அதை காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருப்பவர்கள். நன்றி மறப்பது நன்றன்று, எனவே நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். இம்மியளவு கூட விட்டு கொடுக்கமாட்டேன். சில பேரை கைக்கூலியாக (ஓபிஎஸ், டிடிவி.தினகரன், செங்கோட்டையன்) வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறீர்கள்.
அந்த கைக்கூலிகள் யார் என்று அடையாளம் காட்டிவிட்டோம். அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும். சிலர் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஓட்டு போட்டார்கள். ஆனால் அவர்களை மன்னித்து துணை முதல்வர் பதவி கொடுத்தோம். மீண்டும் அவர்கள் திருந்தியபாடில்லை. அதிமுகவின் கோயிலான கட்சி அலுவலகத்தை அடித்து உடைத்தார்கள். அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? இன்னொருவர் அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்எல்ஏக்களை கடத்திக் கொண்டு போனார். அவர்களையும் கட்சியில் சேர்க்க வேண்டுமா? அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் தான் நிற்பார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியது குறிப்பிடத்தக்கது.
இப்படி பேசிவிட்டுதான் சில மணி நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு நேற்று திடீரென டெல்லிக்கு சென்றார். அமித்ஷாவின் அவசர அழைப்பை ஏற்றுதான் எடப்பாடி டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி அங்கு தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த பின் நேற்று பகல் 12 மணிக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமியும் ராதாகிருஷ்ணனும் ஒன்றாக மதிய உணவு அருந்தினர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்பிக்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை ஆகியோர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு 8 மணிக்கு டெல்லியில் பாஜ மூத்த தலைவரும், ஒன்றிய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி இன்னோவா காரில் சென்றார். பின்னர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆரம்பத்தில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், அதிமுக - பாஜ கூட்டணியில் இடம்பெற வேண்டிய கட்சிகள், எவ்வளவு சீட்களில் போட்டியிடலாம், கூட்டணி அமைச்சரவை, பிரிந்து சென்ற தலைவர்களை இணைப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, அமித்ஷாவின் கோரிக்கையை எடப்பாடி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. தனது நிலைப்பாட்டை அமித்ஷாவிடம் திட்டவட்டமாக எடப்பாடி நேற்று கூறி விட்டதாகவும் தெரிகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி திட்டவட்டமாக கூறியதாகவும், ஆனால் அமித்ஷா எடப்பாடியை எச்சரிக்கும் விதமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அமித்ஷா வீட்டில் இருந்து வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி, நிருபர்களை சந்திக்காமல் பென்ஸ் காரில் முகத்தை மறைத்துக் கொண்டு தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று தங்கினார். இன்று தமிழகம் திரும்புகிறார். ஆனால் இருவர் சந்திப்பின்போது நடந்த தகவல்கள் ரகசியம் காக்கப்படுவதால், அதிமுக-பாஜவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
* இரவு 8 மணிக்கு அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
* இருவரும் தனியாக 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர்.
* அமித்ஷாவின் சமரசத்தை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டதாக தெரிகிறது.
* அமித்ஷா எடப்பாடியை எச்சரிக்கும் விதமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
* அமித்ஷா வீட்டில் இருந்து வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி,முகத்தை மறைத்துக் கொண்டு காரில் சென்றார்.