சபரிமலையில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் கட்டுப்படுத்த வழிமுறைகளை வகுக்க கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். இந்தத் தருணத்தில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 48 நாட்கள் விரதமிருந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் சபரிமலை நோக்கி பெரிய பாதை மற்றும் சிறிய பாதை வழியாக செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்கு நடை திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் இரண்டு இலட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கூறப்பட்டாலும், நெரிசல் காரணமாக பல பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள முடியாமல் திரும்பி உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது வருத்தமளிக்கிறது.
இந்த ஆண்டு கேரள மாநிலம் சபரிமலையில் நடை திறக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதன் காரணமாக, பக்தர்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளாமல் திரும்பிவிட்டதாகவும், பம்பையிலும், சன்னிதானத்திலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய திட்டமிடல் இல்லை என்றும், எட்டு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, உணவு வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும், பக்தர்களையும், வாகனங்களையும் ஒழுங்குபடுத்த போதுமான காவலர்கள் இல்லை என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நாளைக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் மற்றும் உடனடி பதிவு மூலம் 20 ஆயிரம் பக்தர்கள் என 90 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தும், இதனைச் சரியாக கேரள அரசு முறைப்படுத்தாததன் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது.
இது அய்யப்ப பக்தர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவாமி அய்யப்பனை காண முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் செல்வதால், அடிப்படை வசதிகளை செய்து தருவதும், வரிசையை ஒழுங்குபடுத்தி நெரிசலைக் கட்டுப்படுத்துவதும் மிகவும் அவசியம்.
இது குறித்த வழக்கினை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் தேவசம் போர்டு அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததும், அடிப்படை வசதிகள் குறித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை பின்பற்றாததும் தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ற தனது கவலையைத் தெரிவித்து, ஒரே இடத்தில் பக்தர்களை தேக்கி வைப்பது ஆபத்தானது என்பதால் நெரிசலைக் கட்டுப்படுத்த சிறிய குழுக்களாக பிரித்து அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், தினசரி அடிப்படையில் வழங்கப்படும் உடனடிப் பதிவை 20 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக குறைக்கவும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதைக் கருத்தில் கொண்டு, கேரள மாநில முதலமைச்சர் அவர்களுடன் தொலைபேசியில் உடனடியாகப் பேசி, சுவாமி அய்யப்பனை காண சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி போதுமான அடிப்படை வசதிகளை செய்து தரவும், பக்தர்களின் வரிசையை ஒழுங்குபடுத்தி அனைவரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்