எதிர்க்கட்சிகளை குறி வைக்க பிரதமர் மோடி சட்டங்களை ஆயுதமாக பயன்படுத்துகிறார்: கபில் சிபல் தாக்கு
புதுடெல்லி: குற்ற வழக்கில் கைதாகி 30 நாள்கள் சிறை சென்றாலே பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசிலமைப்பு சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய பாஜ அரசு கடந்த 20ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தது.
இந்த மசோதா குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், “பீகாரில் பாஜவுக்கு எதிரான அலை திரும்பி இருப்பதை பாஜ உணர்ந்துள்ளதாலும், மக்கள் பிரச்னைகளை திசை திருப்ப விரும்புவதாலும் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஒன்றியத்திலும், பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் எந்தவொரு அமைச்சரும் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவதில்லை. விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களை மட்டுமே குறி வைத்து கைது செய்கின்றன. எதிர்க்கட்சிகளின் அரசாங்கங்களை சீர்குலைக்க சட்டங்களை ஆயுதமாக பயன்படுத்துவதே இந்த சட்ட மசோதாக்களின் நோக்கம்” என கடுமையாக சாடினார்.