தேனியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என முழக்கம்
தேனி: தேனி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக இன்று தேனி மாவட்டம் கம்பம், போடி, தேனியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். கம்பம் பிரச்சாரத்துக்காக தேனியில் இருந்து பழனிசாமி சென்று கொண்டிருந்தார். அப்போது அனுமந்தன்பட்டி அருகே அமமுகவினர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை திடீரென மறித்தனர்.
அதிமுகவில் இருந்து விலகியவர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர். போலீஸார் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து வாகனங்கள் கிளம்பிச் சென்றன. கம்பத்தை தொடர்ந்து போடியில் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். போடி அரசு பொறியியல் கல்லூரி அருகே எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
அனுமந்தபட்டி, சங்கராபுரம், போடி அரசு பொறியியல் கல்லூரி என 3 இடங்களில் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் முற்றுகையிடப்பட்டது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நோக்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பதாகையுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.