எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் மக்களவை மீண்டும் முடங்கியது: விவாதமின்றி மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டம்
புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மீண்டும் முடங்கியது. தொடர் அமளி காரணமாக, மசோதாக்களை அவசர கதியில் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடந்த 2 நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளியால் இரு அவைகளும் முடங்கின.
பீகாரில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், வார விடுமுறைக்குப் பின் மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் கோஷமிட்டு இடையூறு ஏற்படுத்தினர். அவைக்கு தலைமை தாங்கிய ஜகதாம்பிகா பால், ‘‘இன்று 2 முக்கிய விளையாட்டு மசோதாக்கள் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையை நடத்த ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார்.
ஆனால் அமளி தொடர்ந்த நிலையில் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை தொடங்கிய நிலையில் மீண்டும் அமளி நீடித்ததால், ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சுங்க வரி தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் அவை 3வது வாரமாக முடங்குகிறது என குறிப்பிட்ட ஜகதாம்பிகா பால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘‘தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியும். ஆனால் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முடியாது. இதுதவிர, ஏற்கனவே இதற்கு முன் தீவிர திருத்த நடவடிக்கைகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமளியால் இக்கூட்டத் தொடரில் இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. இனியும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தால், அமளிக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்’’ என்றார். இதன் மூலம் விவாதமின்றி மசோதக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
* சிபு சோரன் மறைவால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
மாநிலங்களவை எம்பியான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா நிறுவனர் சிபு சோரன் மறைவைத் தொடர்ந்து அவருக்கு மாநிலங்களவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதில், ‘பழங்குடியின சமூகத்தினர், ஏழைகள், அடித்தட்டு மக்கள் அதிகாரம் பெற வாழ்நாள் முழுவதும் உழைத்த தலைவர் சிபுசோரன். அவர், பழங்குடியின மக்களின் உரிமைக்காக வலுவாக குரல் கொடுத்தவர். அந்த அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினரை தேசம் இழந்து விட்டது’’ என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
* விவாதத்திற்கு கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும்
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி நேற்று அளித்த பேட்டியில், ‘‘பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் மிகப்பெரிய பிரச்னை. அதனால்தான் நாங்கள் அனைவரும் அப்பிரச்னையை தொடர்ந்து எழுப்புகிறோம். இது குறித்து விவாதம் நடத்த அரசு கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
* டெல்லி போலீசுக்கு சபாநாயகர் அதிரடி உத்தரவு
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே, டெல்லியில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதாவின் செயினை மர்ம நபர்கள் வழிப்பறி செய்த விவகாரம் குறித்து திமுக எம்பிக்கள் மக்களவையில் எழுப்பிய நிலையில், அது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளதாக அவையை தலைமை தாங்கி நடத்திய ஜகதாம்பிகா பால் குறிப்பிட்டார்.