வெளிநாட்டுடன் கைகோர்த்ததாக புகார்; எதிர்க்கட்சி தலைவரின் குடியுரிமை பறிப்பு..? வெனிசுலா அதிபர் பரபரப்பு பேட்டி
கராகஸ்: வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான லியோபோல்டோ லோபஸின் குடியுரிமையைப் பறிக்க அதிபர் நிக்கோலஸ் மதுரோ அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அரசு, தங்களுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2024ம் ஆண்டு முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ, அதிபர் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டார். தற்போது தலைமறைவாக உள்ள அவருக்கு, 2025ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 2020ம் ஆண்டு முதல் ஸ்பெயினில் தஞ்சம் புகுந்துள்ள மற்றொரு முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான லியோபோல்டோ லோபஸை குறிவைத்து மதுரோ அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. தற்போது அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், லியோபோல்டோ லோபஸின் குடியுரிமையைப் பறிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நேற்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வெனிசுலா விசயத்தில் வெளிநாட்டு ராணுவத் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்தது, பொருளாதாரத் தடையை ஊக்குவித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன. அவர் மீது ‘சைமன் பொலிவார் சட்டத்தின்’ கீழ் அவரது குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார். ஆனால், வெனிசுலாவின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பிறப்பால் வெனிசுலா குடிமக்களாக இருப்பவர்களின் குடியுரிமையைப் பறிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கை குறித்து லியோபோல்டோ லோபஸ் கூறுகையில், ‘அனைத்து வெனிசுலா மக்களும் நினைக்கும் மற்றும் விரும்பும் சுதந்திரத்தைப் பற்றி பேசியதற்காக, மதுரோ எனது குடியுரிமையைப் பறிக்க நினைக்கிறார்’ என்று கூறியுள்ளார்.