எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிவு
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சியை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுக்கப்படுவதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், முதலீடுகள் ஊக்குவிப்பு என்பது வழக்கமான தினசரி விளையாட்டால். மாநில வளர்ச்சியை அனைத்து பகுதிகளுக்கும் சமநிலைப் படுத்துவதை சார்ந்தது என்று கூறியுள்ளார். பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்ற முதலமைச்சரின் நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாகவும். மக்கள் திறன்களின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்துறையில் நாட்டிலேயே மிகவும் நம்பத்தகுந்த மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் மற்ற மாநிலங்களை காட்டிலும் உற்பத்தித்துறையில் மிகப்பெரிய சக்தியாக தமிழ்நாடு திகழ்வதாகவும் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்படும் அரசையும், தொழிலாளர்களையும் குறைத்து மதிப்பிடும் சில எதிர்க்கட்சிகளுக்கு முதலீடுகள் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.