திமுகவை எதிர்க்கிறேன் என்பது ஏற்புடையதல்ல விஜய்யை போல ஜோசியம் சொல்ல முடியாது: நயினார் கலாய்
சேலத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தம்பி விஜய், இப்போது தான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். கூட்டம் வருவதை வைத்து திமுகவுக்கும், எங்களுக்கும் தான் போட்டி என்று அவர் பேசுவதை ஏற்க முடியாது. தேர்தல் வரணும், ஒழுங்கான வேட்பாளர் போடணும், பொறுப்பாளர்கள் நியமனம் என்ற பல நிலைகளை அவர் கடக்க வேண்டும், மக்கள் ஓட்டு போடணும், அதன் பிறகு தான் சொல்ல முடியுமே தவிர, தேர்தலில் வெற்றி பெறுவார் என விஜய்யை போல ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது.
விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. தமிழகத்தில் எம்ஜிஆர் தவிர, மற்ற நடிகர்கள் எல்லாம் கட்சி தொடங்கி என்ன ஆனார்கள் என்பது மக்களுக்கு தெரியும். பாஜ மிகப்பெரிய கட்சி. இதனால் விஜய் கட்சியுடன் பாஜவை ஒப்பிட்டு பேசக்கூடாது. திடீரென கட்சி தொடங்கி, திமுகவை எதிர்க்கிறேன் என்பது ஏற்புடையதல்ல. ஆட்சி, நிர்வாகம் என எந்த அனுபவமும் இல்லாமல், ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது சரியல்ல. சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை, வரும் அக்டோபர் மாதம் 11ம் தேதி மதுரையில் தொடங்க உள்ளேன். அதற்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.