எனது கருத்துகளை ரசிகர்கள் மீது திணிக்க மாட்டேன்: நடிகர் அஜித் பரபரப்பு பேட்டி
பார்சிலோனா: தமிழ் படவுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பார்சிலோனாவில் நடந்த 24H என்டியூரன்ஸ் ரேஸில் கலந்துகொண்ட அவர், பிறகு அளித்த பரபரப்பு பேட்டி: கடந்த 2002ல் நான் திருமணம் செய்தபோது, சில காலம் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தேன். ஷாலினி ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் இருந்தார். பிறகு எங்கள் வாழ்க்கையில் மகள் அனொஷ்கா, மகன் ஆத்விக் வந்தனர். குடும்ப பொறுப்புகளும் அதனுடன் சேர்ந்து வந்தன. இதனால் ஷாலினி மிகவும் பிசியாகி விட்டார். ஆனால், தொடர்ந்து அவர் மோட்டார் ஸ்போர்ட்ஸை பின்பற்றுகிறார்.
என் மகன் ஆத்விக்கும் அதையே விரும்புகிறார். அவர் சிறிய கார்களை வைத்து நடக்கும் போட்டியில் கலந்துகொள்கிறார். ஆனால், இன்னும் அவர் தீவிரமாக ஈடுபடவில்லை. இதை உண்மையிலேயே அவர் தொடர விரும்புகிறாரா என்று முடிவு செய்ய, அவருக்கு நான் நேரம் கொடுப்பேன். திரைப்படங்கள் என்றாலும் சரி, கார் பந்தயம் என்றாலும் சரி, எனது கருத்துகளை ரசிகர்கள் மீது திணிக்க மாட்டேன். அவர்கள் தாங்களாகவே முன்வர வேண்டும். அவர்களுக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு இந்தியனாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதிலும் பெருமைப்படுகிறேன். அதுபோல், கார் ரேஸராக நம் நாட்டை பிரதானப்படுத்துவதிலும் நான் அதிக பெருமை அடைகிறேன்.
உண்மையிலேயே நான் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறேன். இந்திய சினிமாவை குறிக்கும் வகையிலான லோகோவை எனது காரில் சேர்க்க போகிறேன். உலகில் அதிக திரைப்படங்கள் உருவாகும் துறையாக இந்திய சினிமா துறை இருக்கிறது. சுமார் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தியாவில் திரைப்படங்கள் உருவாகி வருகிறது. கொரோனா காலத்தில் பொழுதுபோக்கும், விளையாட்டும்தான் மக்களை நிலையாக வைத்திருந்தது. தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். இவ்வாறு அஜித் குமார் கூறினார்.