ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் நமது நாட்டின் ராணுவ பலத்தை உலகம் அறிய முடிந்தது: பிரதமர் மோடி பேச்சு!
டெல்லி: நாடாளுமன்ற விவாதங்கள் ஆரோக்கியமாக நடைபெற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் நாடாளுமன்ற இரு அவைகளும் செயல்படாது என அதிகாரப்பூர்வ அலுவல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் முக்கியமான சட்டமசோதாக்கள், பட்ஜெட் விவாதங்கள் மற்றும் பிற அரசியல் விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும். இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்புகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமான ஒன்று. புத்துணர்ச்சியுடன் மழைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான விவாதங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். நாடாளுமன்ற கூட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆக்சியம் 4 திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு பாராட்டு. விண்வெளித் துறையில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் ராணுவ பலத்தை உலக நாடுகள் கண்டு வியந்தன. பாகிஸ்தானின் தீவிரவாத கட்டமைப்பை மண்ணுக்கடியில் புதைத்து விட்டோம். பயங்கரவாதிகளின் இருப்பிடங்களுக்கே சென்று அவர்களை தீரத்துடன் அழித்துள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100% இலக்குகள் நிறைவேற்றப்பட்டன. இந்திய ராணுவத்தின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் அமைந்தது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் புதிய தொடக்கங்களுக்கான கூட்டத்தொடர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.