ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் அநீதியை எதிர்த்து பழிவாங்கியது இந்தியா: பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து கடிதம்
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர் மூலம் அநீதியை எதிர்த்து பழிவாங்கிய இந்தியா நீதியை நிலைநாட்டியது’ என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தீபத்திருநாளான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் ஆயுதப்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இனிப்பு ஊட்டிய பிரதமர் மோடி அவர்களிடம் பேசுகையில், ‘‘உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் இந்தியாவின் ராணுவ வலிமையை பிரதிபலிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரின் போது விக்ராந்த், பாகிஸ்தானின் தூக்கத்தை கெடுத்தது. பிரமோஸ், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் தங்கள் திறன்களை நிரூபித்தன’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆற்றலும், உற்சாகமும் நிறைந்த தீபாவளி பண்டிகையின் புனிதமான தருணத்தில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது 2வது தீபாவளி. பகவான் ராமர் நீதியை நிலைநிறுத்த கற்றுக்கொடுக்கிறார், அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தையும் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இதற்கு ஒரு உயிருள்ள உதாரணத்தைக் கண்டோம். ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா நீதியை நிலைநாட்டியது, அநீதிக்குப் பழிவாங்கியது.
இந்த தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் வேரிலிருந்து அழிக்கப்பட்ட பல மாவட்டங்களில் முதல் முறையாக தீபம் ஏற்றப்பட்டுள்ளது. சமீப காலங்களில், தனிநபர்கள் பலரும் வன்முறைப் பாதையை கைவிட்டு, அரசியலமைப்பின் மீது நம்பிக்கையை கொண்டு, வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் இணைவதை கண்டிருக்கிறோம். இது நாட்டிற்கு ஒரு பெரிய சாதனை. இந்த வரலாற்று சாதனைகளுக்கு மத்தியில், நாடு அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களிலும் இறங்கியுள்ளது. நவராத்திரியின் முதல் நாளில், குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டன. இதன் மூலம் குடிமக்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சேமித்து வருகின்றனர்.
பல நெருக்கடிகளைச் சந்திக்கும் உலகில், இந்தியா நிலைத்தன்மை மற்றும் உணர்திறன் ஆகிய இரண்டின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் நாம் இருக்கிறோம். நாட்டிற்கான தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதே குடிமக்களின் முதன்மை பொறுப்பு. சுதேசியை ஏற்றுக்கொண்டு, ‘இது சுதேசி’ என்று பெருமையுடன் மக்கள் சொல்ல வேண்டும்.
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை ஊக்குவிப்போம். அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மையைப் பேணுவோம். ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம். உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைத்து யோகாவை ஏற்றுக்கொள்வோம். இந்த முயற்சிகள் அனைத்தும் நம்மை வளர்ந்த இந்தியாவை நோக்கி விரைவாக அழைத்துச் செல்லும். தீபாவளியன்று நமது சமூகத்திலும் சுற்றுப்புறத்திலும் நல்லிணக்கம், ஒத்துழைப்பு மற்றும் நேர்மறைத் தீபங்களை ஏற்றுவோம். இவ்வாறு பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு வாழ்த்து
தீபாவளியையொட்டி பிரதமர் மோடி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதே போல, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர், பாக். பிரதமர் வாழ்த்து
தீபாவளியையொட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘இருளை வீழ்த்திய ஒளியின் வெற்றியை நினைவுகூறும் காலத்தால் அழியாத தீபாவளி பண்டியை கொண்டாடும் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் வாழ்த்துக்கள்’ என அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘‘அமைதி, சகிப்புத்தன்மைக்கான நிலம் பாகிஸ்தான். இங்கு வெறுப்பு, ஒழுங்கீனம், தீவிரவாதத்திற்கு இடமில்லை’’ என கூறி உள்ளார். இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்களுக்கு இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் வாழ்த்து கூறி உள்ளார்.
12 லட்சம் தீபங்கள் தானம்
மத்தியபிரதேசத்தின் சித்ரகூடத்தில் உள்ள மந்தாகிரி ஆற்றில் தீபாவளி தினத்தில் 12 லட்சம் தீபங்களை பக்தர்கள் தானம் செய்தனர். தீபம் ஏற்றப்பட்ட விளக்குகள் ஆற்றில் விடப்பட்டு பக்தர்கள் வேண்டிக் கொண்டனர். ராமரின் 14 ஆண்டு வனவாசத்தில் சீதையும், லட்சுமணனும் 11 ஆண்டுகள் சித்ரகூடத்தில் வசித்ததாக ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.