அரசு பல் மருத்துவமனை, மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் போதிய பல் மருத்துவர்கள் இல்லாததால், அந்த மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு இந்திய பல் மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. இதனையடுத்து, கடலூர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கான அங்கீகாரத்தை தக்க வைத்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் பல்வேறு அரசு பல் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 27 பல் மருத்துவர்களை கடலூர் மற்றும் புதுக்கோட்டை பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவர்களின் வேலைப் பளுவை அதிகரிக்க வழிவகுப்பதோடு, ஏழையெளிய மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, அரசு பல் மருத்துவமனைகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை மருத்துவ தேர்வு வாரியம் மூலம் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.