ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்க பாஜக முயற்சி; பி.எல்.சந்தோசை சந்திக்க வருமாறு அழைப்பு
சென்னை: பி.எல்.சந்தோசை சந்திக்க வருமாறு தொலைபேசி வாயிலாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, 'அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு' என்ற அமைப்பை உருவாக்கி, தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய மந்திரி அமித்ஷா, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். இந்த கூட்டணி வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளது.
அதே நேரம் தாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வந்தார். இதற்கிடையே கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை, நேரில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்தார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்டு வெளியேறினார்.
இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் பி.எல்.சந்தோசை சந்திக்க வருமாறு தொலைபேசி வாயிலாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. நாளை தமிழ்நாடு வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோசை சந்திக்க ஓபிஎஸுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு சென்னை வர வாயப்பு உள்ளது. உரிமை மீட்புக் குழுவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.