ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ‘ஸ்டார் ஆப் பெத்லகேம்’ மலர்கள்: சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி:‘ஸ்டார் ஆப் பெத்லகேம்’ என அழைக்கப்படும் ஆர்னிதோகலம் மலர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்குகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பெகோனியா, பால்சம், லிசியந்தஸ், சைக்ளோமென், ஆர்கிட், அந்தோரியம் உள்ளிட்ட பல்வேறு மலர் வகைகளும், கேக்டஸ் எனப்படும் பல்வேறு வகையான கள்ளிச் செடிகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதில் ‘ஸ்டார் ஆப் பெத்லகேம்’ எனப்படும் மலர்கள் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்குகிறது.
இவை வற்றாத தாவரங்களின் ஒரு இனமாகும். தெற்கு ஐரோப்பா மற்றும் தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இது அஸ்பாரகேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த இனத்தின் பொதுவான பெயர் ‘ஸ்டார் ஆப் பெத்லகேம்’ ஆகும். இந்த மலர்கள் இயேசு பிறந்த பெத்லகேமில் அதிகம் காணப்படுவதால் அதற்கு இந்த பெயர் வந்துள்ளது. கண்ணாடி மாளிகையில் நட்சத்திர வடிவில் இந்த மலர்கள் பூத்து குலுங்குகிறது. இவற்றை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன், அதன்முன் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.