ஊட்டி- பார்சன்ஸ்வேலி சாலை சீரமைப்பு: பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி
ஊட்டி: ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி சாலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊட்டி அருகேயுள்ள பார்சன்ஸ்வேலி பகுதியில் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளன. மேலும், போர்த்திமந்து பகுதியிலும் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதுதவிர பார்சன்ஸ்வேலி, கவர்னர்சோலை உட்பட பார்சன்வேலியை சுற்றிலும் தோடர் பழங்குடியின மக்கள் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்கள் தங்களது எந்த ஒரு தேவைகளுக்கும் ஊட்டி நகருக்கே வர வேண்டும். மேலும், அடர்ந்த வனப்பகுதி வழியாக வரவேண்டும். ஆனால், ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இச்சாலை, ஊட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது.
ஊட்டியில் இருந்து தீட்டுக்கல் செல்லும் வரையில் மட்டுமே நகராட்சிக்கு சொந்தமானது. அங்கிருந்து சுமார் 15 கி.மீ., தூரத்திற்கு உள்ள சாலை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது. இச்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து, இச்சாலை சீரமைக்கப்படாத நிலையில், சாலையில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, இச்சாலை சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. ஏற்கனவே, இருந்த பழைய சாலையில் இருந்த கற்கள் அகற்றப்பட்டு புதிதாக சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இப்பணிகள் முடிந்த நிலையில், தற்போது தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் இச்சாலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.