ஊட்டி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு
ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பேரிடர் அவசர கால கட்டுபாட்டு மைய செயல்பாட்டினை மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வினீத் தலைமை வகித்தார். அவர் தற்போது நடந்து வரும் வளர்ச்சி பணிகளின் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் கண்காணிப்பு அலுவலர் வினீத் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில், சுகாதார துறை சார்பில், நடந்து வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை மழைக்காலங்களுக்கு முன்பாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நடைபெறவுள்ள பணிகளுக்கு பணி ஆணை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்று சேர்க்கும் வகையில், துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வினீத் பர்லியார் முதல் குன்னூர் வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 2024-25ம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.19.47 கோடியில் நடக்கும் நிலச்சரிவு மற்றும் மண் ஆணி பொருத்தும் பணி, பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.37 கோடி மதிப்பில் நடந்து வரும் கட்டபெட்டு - இடுஹட்டி சாலை பணி, ஊட்டி நகராட்சி பகுதியில் 2025-26ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.57 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சம்மர் ஹவுஸ் கான்கிரீட் சாலை பணி என மொத்தம் ரூ.22 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன், வெளிநோயாளி பிரிவு, அவசரகால பிரிவு, எம்ஆர்ஐ ஸ்கேன் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளையும், கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பேரிடர் அவசர கால கட்டுபாட்டு மைய செயல்பாட்டினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடனிருந்தனர்.