மலர் காட்சிக்கு தயாராகுது ஊட்டி தாவரவியல் பூங்கா: விதைகள் சேகரிப்பு பணியில் ஊழியர்கள் மும்முரம்
ஊட்டி: 2026ம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் விதை சேகரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கோடை சீசனின்போது, ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இவர்களை, மகிழ்விப்பதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும், கோத்தகிரி நேரு பூங்காக்களில் காய்கறி கண்காட்சியும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், ஊட்டி தவாரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சியை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் தாவரவியல் பூங்கா மற்றும் தொட்டிகளில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்த மலர் செடிகளில் ஏப்ரல் இறுதி வாரம் முதல் பூக்கள் பூக்க துவங்கும்.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது பல வகையான வண்ண வண்ண மலர் பூத்துக்குலுங்கும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்ட தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்படும். இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். இந்த மலர் கண்காட்சிக்காக நாற்றுகள் நடவுசெய்ய தற்போது விதை சேகரிப்பு பணிகள் நடந்து வருகிறது. 6 மாதங்களுக்கு பின் பூக்கக்கூடிய மலர் செடிகளான பென்சீனியம், பெட்டூனியம் மற்றும் சால்வியா போன்ற சில மலர் செடிகளின் விதைகள் ேசகரிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அதேபோல், விதைகள் ேசகரிக்கப்பட்ட மலர் செடிகள் மற்றும் மழையில் அழுகிய செடிகளை அகற்றும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் பாத்திகளை சீரமைத்து விதைப்பிற்காக தயார்படுத்துப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 2026ம் ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக, பூங்காவை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக விதைகள் சேகரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. 6 மாதத்திற்கு ஒருமுறை பூக்கக்கூடிய சில மலர் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. விதைகள் சேகரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. மேரிகோல்டு, சால்வியா, பெட்டூனியம் மற்றும் டெல்பீனியம் ஆகிய செடிகளின் விதைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விதைகள் சேகரிப்பு பணிகள் முடிந்தவுடன் விதைப்பு பணிகள் துவக்கப்படும். பின்னர், நடவு பணிகள் படிப்படியாக துவக்கப்பட்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெறும். அதேபோல் மலர் தொட்டிகளில் விரைவில் மண் நிரப்பும் பணிகள் துவக்கப்படவுள்ளது. இதில், விதைகள் நடவு செய்யப்பட்டு மலர் செடிகளை நடவு ெசய்யும் பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும், என்றனர்.