ஊட்டியில் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரிப்பு
ஊட்டி : ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதுடன், மலை காய்கறி விவசாய பணிகள் துவங்கியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி டிசம்பர் வரை தென்மேற்கு, வடகிழக்கு என இரு பருவமழை மழை கொட்டி தீர்க்கும். பருவமழையை நம்பி மலை காய்கறி விவசாயம் நடைபெறுவது வழக்கம்.
மழை சமயத்தில் விவசாயிகள் மலை சாிவு பகுதிகள் மற்றும் சமமான பகுதிகளில் அதிகளவு விவசாயம் மேற்க்கொள்வார்கள். இந்நிலையில், இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை கடந்த மே இறுதி வாரத்தில் துவங்கியது. 40 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், மஞ்சூர், கூடலூர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் உரமிட்டு பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் மலை காய்கறி விவசாயமும் சுறுசுறுப்படைந்துள்ளது. ஏற்கனவே பயிரிட்ட உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவைகளை அறுவடை செய்து மார்கெட்டிற்கு அனுப்பி வருகின்றனர். கொல்லிமலை, முத்தோரை பாலாடா, கேத்தி பாலாடா, தேனாடுகம்பை, எப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் விளை நிலங்களை சமன்படுத்தி அங்கு முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறி விவசாயம் மேற்கொள்ளும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘இம்முறை நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கிய நிலையில், விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதனை பயன்படுத்தி காய்கறி பயிரிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறோம், என்றனர்.