ஊட்டி பைன் பாரஸ்ட்டை காணகேரளா, கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அண்டை மாநிலமான கர்நாடக மற்றும் கேரளாவில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வழக்கமான சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்காமல் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியிலே கண்டு ரசிக்கவே ஆர்வம் அதிகம் காட்டுகின்றனர். வனங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகம் உள்ள பகுதிகளை கண்டு ரசிக்கவும் அணைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற பகுதிகளை காண அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் தலைகுந்தா அருகே பைன் பாரஸ்ட் சுற்றுலா தலம் உள்ளது. இங்கு ஏராளமான பைன் மரங்களுக்கு இடையே அழகிய நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் வழியாக சென்றால் காமராஜ் சாகர் அணையின் அழகை காண்பதற்காக கூடலூர் வழியாக ஊட்டி வரும் கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநில சுற்றுலா பயணிகள் இந்த பைன் பாரஸ்ட் பகுதியில் குவிகின்றனர்.
மேலும் இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிப்பது மட்டுமின்றி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.பொதுவாக வார விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கை. ஆனால், தற்போது வர உள்ள நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிறிய கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.