ஊட்டி மலை ரயிலுக்கு நாளை 117வது பிறந்த நாள்
*கேக் வெட்டி கொண்டாட முடிவு
ஊட்டி : ஊட்டி மலை ரயிலின் 117வது பிறந்த நாள் வரும் நாளை (அக்.15ம் தேதி) கொண்டாடப்படும் நிலையில், ஊட்டி ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்துள்ளனர்.மலைகளின் நடுவே தினமும் தவழ்ந்து வரும் ஊட்டி மலை ரயில் கடந்த 120 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே இயக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் கழித்து குன்னூரில் இருந்து ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில் என்ற பகுதிக்கு இயக்கப்பட்டது.
அதன்பின், கடந்த 1909ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஊட்டியில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர், மலை ரயில் ஊட்டி நகருக்குள் கொண்டு வரப்பட்டது. இது ஆசியக் கண்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் மலை ரயில் பாதையாகும். குன்னூரிலுள்ள பணிமனை தெற்கு ரயில்வேயில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரே நீராவி இன்ஜின் பணிமனையாகும்.
இந்த பணிமனை கடந்த 1899ம் ஆண்டு துவக்கப்பட்டது. மேட்டுப்பளையம் - குன்னூர் பிரிவில் பயன்படுத்துவதற்காக நீராவி இன்ஜின்கள் சுவிட்சர்லாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்படுகின்றன.
மேட்டுப்பளையம்-குன்னூர் இடையே உள்ள ரயில் பாதை ஆசியாவிலேயே மிகவும் செங்குத்தானது. இதனால், பல் சக்கரத்தின் உதவியுடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது. நிலக்கரி விலை உயர்வாலும், 100 ஆண்டுகளுக்கு மேல் மலைப்பாதையில் பயணிகளை இழுத்துக் கொண்டு ஓடிய களைப்பில் நீராவி இன்ஜின்கள் உள்ளதால், டீசல் இன்ஜின் ஊட்டி-குன்னூர் இடையே பயன்படுத்தப்படுகிறது.
11.516 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் அகலமும் கொண்ட 4 பெட்டிகளை இந்த ரயில் கொண்டுள்ளது. இந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை (46 கி.மீ) தூரம் கடக்க 208 வளைவுகளையும், 250 பாலங்களையும், 16 சுரங்க பாதைகளையும் கடந்து செல்கிறது. இதனால், நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என ரயில்வே துறை மற்றும் நீலகிரி பாரம்பரிய ரயில் பாதுகாப்பு சங்கம் ஆகியவை வலியுறுத்தி வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி டர்பன் நகரில் நடந்த உலக பாரம்பரிய குழுவின் 29வது கூட்டத்தில் இது ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்பின், நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ பாரம்பரிய ரயிலாக அறிவித்தது. இதனால், இந்த ரயில் நிலையம் மற்றும் ரயில் உலக சுற்றுலா வரைப்படத்தில் இடம் பெற்றது.
இந்நிலையில் இந்த மலை ரயிலின் விழாவை நாளை 15ம் ேததி ஊட்டி ரயில் நிலையத்தில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாட பாரம்பரிய மலை ரயில் அறக்கட்டளை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ரயிலில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கவுள்ளதாகவும் அதன் நிர்வாகி நடராஜ் தெரிவித்தார்.