ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் இரவில் யானைகள் நடமாட்டம்: போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்: ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் இரவில் யானைகள் நடமாடியதால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் கூடலூரை அடுத்து சனிபகவான் கோயில் பகுதியில் நேற்று இரவு குட்டியுடன் கூடிய யானை கூட்டம் நடமாடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு காத்திருந்தனர். யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் அங்கிருந்து வாகனங்களை எடுத்து சென்றனர்.
இந்த சாலையில் சில்வர் கிளவுட் முதல் ஊசிமலை காட்சி முனை பகுதி வரையில் உள்ள சாலையில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இங்குள்ள வனப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் சில நேரங்களில் சாலைகளில் நடமாடி வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் ஊசி மலை காட்சி முனை பகுதியில் குட்டியுடன் கூடிய யானை நடமாடியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
யானைகள் அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றதை அடுத்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கேரளாவில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் அந்த வழியாக மீண்டும் திரும்பிச் செல்கின்றனர். எனவே இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இப்பகுதியை கடந்து செல்ல வேண்டும் என்றும், யானைகளை விரட்டும் நடவடிக்கைகளில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.