ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு இலவச பேட்டரி கார் சேவை துவக்கம்
ஊட்டி : ஊட்டி எச்பிஎப்., பகுதியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இலவச பேட்டரி கார் சேவை துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்க கூடிய பொதுமக்கள் உயர்தர மருத்துவ சிசிச்சை பெறும் வகையில் ஊட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
நீண்டகால கோரிக்கையை ஏற்று ஊட்டி எச்பிஎப்., பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டது. இம்மருத்துவ கல்லூரி சிம்லாவிற்கு அடுத்தபடியாக மலைப்பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவ கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவிலேயே 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைந்துள்ள மலைபிரதேசம் என்றால் நீலகிரி என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும். பழங்குடி மக்களுக்கென தனியாக 50 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
எம்ஆர்ஐ., சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற அதிநவீன தொழில்நுட்பத்துடனும், 10 அறுவை சிகிச்சை அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதியன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ஏப்ரல் 23ம் தேதி முதல் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அவரச சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, விபத்து பிரிவு உள்ளிட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் புதிய மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் நுழைவுவாயில் பகுதியில் இறங்கி சுமார் 300 மீட்டர் தூரம் மேடான பகுதியில் நடந்து வர வேண்டிய சூழல் இருந்து வந்தது. வயதானவர்கள் மற்றும் நோயாளிகளின் நலன்கருதி புதிதாக ஒரு பேட்டரி கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி கார் பயன்பாடு நேற்று முதல் துவங்கியுள்ளது. இதனை முதல்வர் கீதாஞ்சலி துவக்கி வைத்தார். நுழைவுவாயில் பகுதியில் இருந்து வெளி நோயாளிகள் பிரிவு வரை இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர அரசு பஸ் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று வர வசதியாக தனியாக ஒரு வழி ஏற்படுத்தப்பட உள்ளது. இப்பணிகள் முடிவடைந்த பின் அனைத்து பஸ்களும் மருத்துவ கல்லூரிக்குள் சென்று வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நுழைவுவாயில் அருகே சாலையின் இருபுறமும் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மருத்துவமனை பயன்பாட்டிற்காக மினிபஸ் வரவுள்ளது. மேலும் உயர்கோபுர ஐமாஸ் விளக்கும் அமைக்கப்பட உள்ளது.