ஊட்டி - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் பாதியில் நிற்கும் மேம்பாட்டு பணிகள்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தை மற்ற சமவெளி பகுதி மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக கூடலூர் - ஊட்டி - மேட்டுபாளையம் இடையேயான தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனால் இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்த நிலையில் அதிகரித்து வரும் வாகனங்கள், சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக இருந்து வந்தது. இச்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு ரூ.138 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டது.
குறுகலான பகுதிகளில் தடுப்புசுவர்கள் கட்டி விரிவாக்கம் செய்தல், பாலம் கட்டும் பணிகள் பல்வேறு மேம்பாட்டு பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. குன்னூர் - ஊட்டி இடையே 14 கிமீ தூர சாலையில் பல இடங்களில் நிலத்தடி மழைநீர் வடிகால்கள், தடுப்புசுவர் உள்ளிட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. அருவங்காடு முதல் பாய்ஸ் கம்பெனி வரை சாலையோரம் விரிவாக்கம் செய்யப்பட்டு ஜல்லி, எம்.சாண்ட் கொட்டிப்பட்டது.
ஆனால் தார் சாலை அமைக்காததால் கடந்த பருவமழையின் போது அடித்து செல்லப்பட்டு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சீராக வாகனங்களை இயக்க முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதேபோல் குன்னூர் - மேட்டுபாளையம் இடையே பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இவை இருப்பதே தெரியாததால் வேகமாக வர கூடிய வாகனங்கள் தடுமாற கூடிய சூழல் நிலவுகிறது.
இரு சக்கர வாகன ஓட்டிகளும் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து சில வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். எனவே மந்த கதியில் நடைபெறும் சாலை பணிகளை விரைவுபடுத்தி ஊட்டி - குன்னூர் இடையே சாலையை தரமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை செப்பனிட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.