ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே புலி தாக்கி வளர்ப்பு எருமை பலி
ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியில் புலி தாக்கி எருமை பலியானதால் பழங்குடியின மக்கள் அச்சத்தில் உள்ளனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா வனப்பகுதியை ஒட்டி ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதி வருவதால் அங்கிருந்து தாவரவியல் பூங்கா அருகில் உள்ள வனப்பகுதிக்கு புலி, சிறுத்தை அதிகளவு வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் நேரில் பார்த்த நிலையில் தற்போது புலி நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருந்த தோடர் பழங்குடியின மக்களின் வளர்ப்பு எருமையை புலி வேட்டையாடி சாப்பிட்டுள்ளது. இதனால், புலி மீண்டும் இந்த பகுதிக்கு வர வாய்ப்பு உள்ளது என்பதால் தோடர் இன மக்கள் மற்றும் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆடு உள்ளிட்ட சிறிய விலங்குகளை தான் சிறுத்தை வேட்டையாடும்.
மிகப்பெரிய வளர்ப்பு எருமையை சிறுத்தையால் வேட்டையாட முடியாது. ஏற்கனவே இந்த பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை பலரும் பார்த்திருந்தனர். தற்போது எருமையை வேட்டையாடி இருப்பதால் புலி நடமாட்டம் உறுதியாகி உள்ளது. உடனடியாக புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்’’ என்றனர். இதனிடையே வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.