ஊட்டி நகர் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள்
ஊட்டி : ஊட்டி நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டி நகரம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டி நகரின் சுற்றுப்புற பகுதிகளான எல்க்ஹில், வண்டிசோலை, ஓல்டு ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாடு, ஆடு போன்ற கால்நடைகள் வளர்க்க கூடிய உள்ளூர் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை புல்வெளி உள்ள பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பாமல் அவற்றை ஊட்டி நகரில் விட்டு விடுகின்றனர்.
இவை ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் காய்கறி ஏலம் நடைபெறும் பகுதியை முற்றுகையிட்டு காய்கறி கழிவுகளை உட்கொள்கின்றன. தொடர்ந்து, மார்க்கெட் வெளிப்புறம் புளூமவுண்டன், சேட் மகப்பேறு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதி, மாரியம்மன் கோயில், மணிக்கூண்டு, கமர்சியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிதிரிகின்றன. இதேபோல் ஊட்டியில் குதிரைகளை வைத்து சவாரி தொழில் செய்பவர்கள், சவாாிக்கு பயன்படுத்தப்படும் இந்த குதிரைகள் முறையாக பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர்.
அவை அவை உணவு, தண்ணீர் தேடி ஊட்டி நகாின் முக்கிய சாலைகள், உணவகங்கள், மார்க்கெட் பகுதிகளில் சுற்றி திாிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். கோடை சீசன் சமயத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகளை சுற்றி திரிய விடுவதை கால்நடை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
இதனை மீறி கால்நடைகளை ஊட்டி நகரில் உலாவ விட்டால், கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என கடந்த காலங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது கோடை சீசன் களைகட்டிய நிலையில் ஊட்டிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, கமர்சியல் சாலைகளில் குதிரைகள் சாலையில் உலா வருகின்றன. இதேபோல் மார்க்கெட் மற்றும் ஏடிசி உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் நடமாட்டம் உள்ளது. ஆனால் இவற்றை கட்டுபடுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. எனவே கால்நடைகள் மற்றும் குதிரைகளால் விபத்து மற்றும் சுற்றுலா பயணிகளை தாக்கும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு, கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.