வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு இணையவழியில் உரிமம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல்
நாய் மற்றும் பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகள் வீடுகளில் வளர்க்கப்படும் நிலையில், இச்செல்ல பிராணிகள் பொது இடங்களில் உரிமையாளர்களால் அழைத்து செல்லப்படுகிறது. இவ்வாறான நிகழ்வில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி கட்டாயமாக போடப்பட்டிருக்க வேண்டும். மேலும், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு அவற்றின் உரிமையாளார்கள் உரிமம் அவசியம் பெற்றிட வேண்டும்.
நாய் மற்றும் பூனை ஆகிய செல்லபிராணிகளின் உரிமையாளர்கள் உரிமம் பெறுவதற்கு தாம்பரம் மாநகராட்சியின் https://tcmcpublichealth.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் உரிமையாளர்கள் 20.6.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை மாநகராட்சியின் பொது சுகாதர பிரிவு கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மருத்துவர் குழு இணைந்து ஆய்வு செய்து ஒரு மாத காலத்திற்குள் உரிமச்சான்று மாநகராட்சி நகர்நல அலுவலர் அவர்களால் வழங்கப்படும். இதன் வாயிலாக தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட செல்லப் பிராணிகள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படுவதன் மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாக்க உறுதி செய்யப்படும். எனவே, தாம்பரம் மாநகராட்சியின் இணையதளத்தில் செல்லப்பிராணிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து, தங்கள் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை பெற்று பயனடையுமாறு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.