ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அமலாக்கத்துறை முன் ஆஜர்
புதுடெல்லி: 1xபெட் என்ற ஆன்லைன் சூதாட்ட செயலி பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை ஏமாற்றியதாகவும், நேரடி மற்றும் மறைமுக வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இதில், ஆன்லைன் சூதாட்ட செயலியின் விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் உள்ளிட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், அமலாக்கத்துறையின் நோட்டீசின்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று பகல் 12 மணிக்கு நேரில் ஆஜரானார். சில மணி நேர விசாரணையில் அவரது வாக்குமூலத்தை அமலாக்க அதிகாரிகள் பதிவு செய்தனர். சூதாட்ட செயலியினர் எப்படி தொடர்பு கொண்டனர், சம்பள பணத்தை எப்படி கொடுத்தனர், யார் அவர்கள் என்பது குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.