ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி: 2 பேர் கைது
சென்னை: பாலவாக்கம் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம் 19ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், நான் விளையாட்டு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்து, கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை ஆன்லைன் செயலி மூலம் ரூ.2.49 கோடி முதலீடு செய்தேன்.
அதில் எந்தவித லாபமும் இல்லாததால், முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முயன்ற போது, அந்த ஆன்லைன் நிறுவனம் பல்வேறு காரணங்களை கூறி பணத்தை திரும்ப எடுப்பதை தடுத்து, மேலும் பணம் முதலீடு செய்யும்படி வலியுறுத்தியது. அதன் பிறகு நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும், என்று தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீநாதா மற்றும் உதவி கமிஷனர் ராகவி, இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். அதில், மோசடி ஆசாமி, திருப்பூர் ஸ்ரீசாய் கிருஷ்ணா ஓட்டலுக்கு சொந்தமான வங்கி கணக்கை பயன்படுத்தியது தெரியவந்தது.
அந்த வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரித்த போது, திருப்பூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (32) மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் (32) ஆகியோர் பல்வேறு வங்கி கணக்குகளை தொடங்கி மோசடி கும்பலுக்கு பரிவர்த்தனை செய்ய உதவியது தெரியவந்தது. பணத்திற்கான கமிஷன் தொகையும் அவர்கள் பெற்றது உறுதியானது. மேலும், இருவரின் வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு செய்த போது, பல்வேறு மாநிலங்களில் மோசடி வழக்குகளில் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.