ஆன்லைன் சூதாட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களின் சொத்துக்கள் விரைவில் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்ட வழக்கில் விசாரிக்கப்பட்ட சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை அமலாக்கத்துறை விரைவில் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 1xபெட் என்ற ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு தளம் தொடர்பான முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை நடிகர்கள் சோனு சூட், மிமி சக்ரவர்த்தி (முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.), அங்குஷ் ஹஸ்ரா (பெங்காலி நடிகர்) மற்றும் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா மற்றும் ஷிகர் தவான் உள்ளிட்டோரிடம் கடந்த சில வாரங்களாக விசாரணை நடத்தியது.
இவர்களில் சிலர் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்ற பணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சொத்துக்களை வாங்கி உள்ளனர். இந்த சொத்துக்கள் குற்றத்தின் வருமானமாக பட்டியலிட்டுள்ள அமலாக்கத்துறை அவற்றை பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளது. விரைவில் முடக்க பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.