ஆன்-லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்
புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டுகளால் நாடு முழுவதும் பலர் பணத்தை இழந்து வருவது மட்டுமில்லாமல், தற்கொலையும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதையடுத்து அதுபோன்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக ஒன்றிய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதில், ‘‘ஆன்லைன் விளையாட்டுகள் ஊக்குவித்தல் மற்றும் நெறிமுறைப்படுத்துதல் சட்டம் 2025 என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாட முடியாது என்ற தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் கடந்த 4ம் தேதி ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘‘ஆன்லைன் கேமிங் தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் மாற்றி அமைக்க வேண்டும்.
இதனால் பலதரப்பட்ட நடவடிக்கைகள், முரண்பட்ட தீர்ப்புகள் ஆகியவை தடுப்பது மட்டுமில்லாமல், வழக்கில் விரைவான நீதி கிடைக்கும். இதுகுறித்து கோரிக்கை கொண்ட மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் ஒரு அறிவிப்பை நேற்று வெளியிட்டனர்.
அதில், “இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கைக்கு எதிராக மனுதாரர்கள் தரப்பில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதை அடிப்படையாக கொண்டு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.