ஆன்லைன் வர்த்தகம் வீடு தேடி வரும் பட்டாசுகள்
*தற்காலிக கடைகளில் வியாபாரம் பாதிப்பு
திருப்பூர் : சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவதால் உள்ளூர் வியாபாரம் பாதிக்கப்படுவதாக தற்காலிக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தீபாவளி என்றாலே சிறியவர்கள்,இளைஞர்களின் முதல் விருப்பத் தேர்வாக இருப்பது பட்டாசுகள். வண்ண மயமான ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகள் தீபாவளியை வரவேற்கிறது. இதற்காக தீபாவளிக்கு சில நாட்கள் முன்னதாகவே பட்டாசு வகைகளை தேர்ந்தெடுத்து அதனை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் ஒட்டுமொத்த பட்டாசுகளில் 90 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து பட்டாசு வாங்கி வந்து தீபாவளிக்கு சில நாட்கள் முன்னதாகவே திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்து விற்பனை நடைபெறும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு கடை அமைப்பதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதன் காரணமாக தீபாவளிக்கு 7 முதல் 15 நாட்கள் முன்னதாக மட்டுமே பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து வரக்கூடிய நிலையில் கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதால் தங்களது வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு 2 மாதங்கள் முன்பாக பட்டாசு ஆர்டர் செய்து வாங்கினால் 80 சதவீதம் வரை தள்ளுபடி, உற்பத்தி விலைக்கே விற்பனை, இலவச டோர் டெலிவரி என பல்வேறு சலுகைகளை கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்கின்றனர்.
இதனால் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் இருந்தவாறு செல்போன் மூலமாக தங்களுக்கு தேவையான பட்டாசு கடை ஆர்டர் கொடுத்து பெற்று விடுகின்றனர். மேலும் சிலர் குழுக்களாக சேர்ந்து சிவகாசிக்கு சென்று பட்டாசுகளை மொத்தமாக வாங்கி வருகின்றனர். இதனால் உள்ளூரில் பல்வேறு நிபந்தனைகளை ஏற்று கடை நடத்தும் உரிமையாளர்களுக்கு வியாபாரம் குறைந்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் மாநகர பகுதியில் கடை அமைக்கும் உரிமையாளர் சிவனேஷ் கூறுகையில், வெடி விபத்துகளை காரணம் காட்டி கடந்த சில ஆண்டுகளாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இதனை அத்தனையும் ஏற்றுக்கொண்டாலும் தீபாவளிக்கும் முன்னதாக 7 முதல் 10 நாட்களுக்கு முன்பாகத்தான் பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால் அதற்கு முன்னதாகவே ஆன்லைன் மூலமாக பொதுமக்கள் பட்டாசுகளை வாங்கி வருகின்றனர். இதனால் எங்கள் பட்டாசு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன் சில்லறை வியாபாரம் மட்டுமே நடைபெறுகிறது.தீபாவளிக்கு சில நாட்கள் முன்னதாகவே கடை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். அதே நேரத்தில் ஆன்லைன் விற்பனையை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
330 பட்டாசு கடைகள்
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு கடை அமைக்க விண்ணப்பம் செய்திருந்த நிலையில் மாநகரப் பகுதியில் 150 மற்றும் மாவட்ட பகுதிகளில் 180 கடைகள் அமைக்க இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இருப்பினும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகே உறுதி செய்யப்படும் எனவும், இன்று அல்லது நாளைக்குள் வியாபாரம் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.