ஆன்லைன் பட்டாசு விற்பனை விவகாரம்; சைபர் கிரைம் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: ஆன்லைன் பட்டாசு விற்பனை குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பாக விளம்பரம் வெளியாகி வருகிறது. எனவே, ஆன்லைன் பட்டாசு விற்பனை தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதித்தும், விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தர்மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘‘ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வது விதி மீறும் செயல் என்பதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் தனது கோரிக்கை குறித்து சைபர் கிரைம் எஸ்பியிடம் மனு அளிக்க வேண்டும். இந்த மனுவின் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.