ஆன்லைன் சூதாட்டம்: துப்பாக்கியை அடகு வைத்த எஸ்ஐ சஸ்பெண்ட்
திருமலை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி கடனில் சிக்கி நகைகள், துப்பாக்கியை அடகு வைத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராயச்சோட்டியைச் சேர்ந்தவர் பானுபிரகாஷ். இவர் தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2020ம் ஆண்டு பேட்ச்சில் சப்-இன்ஸ்பெக்டராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அம்பர்பேட்டை காவல் நிலையத்தில் துப்பறியும் பிரிவில் சேர்ந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளார். மேலும் பலரிடம் கடன் வாங்கியும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து கேட்டதால் செய்வதறியாது திகைத்தார். இந்நிலையில் காவல்நிலையத்தில் திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட 8 சவரன் நகைகளை லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதையறிந்த பானுபிரகாஷ் அவற்றை திருடி விற்பனை செய்துவிட்டு கடனை திருப்பி கொடுத்தார். ஆனாலும் கடனை முழுமையாக அடைக்க முடியாமல், தனது சர்வீஸ் துப்பாக்கியையும் தனிநபரிடம் அடமானம் வைத்து பணம் வாங்கி கடன்காரர்களுக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் நடந்த குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற பானுபிரகாசுக்கு மாவட்ட சமூக நல அதிகாரியாக வேலை கிடைத்தது. இதனால் தன்னை எஸ்ஐ பணியில் இருந்து விடுவிக்கும்படி இன்ஸ்பெக்டரிடம் விண்ணப்பித்தார். லத்தி, பேட்ஜ் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தார். அப்போது துப்பாக்கி குறித்து கேட்டபோது, மேஜையில் வைத்திருந்த துப்பாக்கி காணாமல் போனதாகவும், தோட்டாக்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் இருந்து துப்பாக்கி திருட்டு போனதாக பானுபிரகாஷ் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர், சி.சி.டிவி கேமரா பதிவுகளை கண்காணித்தார். அப்போது பானுபிரகாஷ், காவல்நிலையத்தில் இருந்து 8 சவரன் நகையை எடுத்துச்செல்வது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, தனது சொந்த தேவைக்காக நகையை அடகு வைத்ததாக தெரிவித்தார்.இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர் அறிக்கை அளித்தார். இதனை தொடர்ந்து அதிரடிப்படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் பானுபிரகாஷிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், நகை மற்றும் துப்பாக்கியை அடகு வைத்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து தனிநபரிடம் அடகு வைத்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பானுபிரகாஷை நேற்று சஸ்பெண்ட் செய்து போலீசார் அதிகாரிகள் உத்தரவிட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பானுபிரகாஷ்ரெட்டி, பணியில் மிக திறமையாக செயல்பட்டு நற்பெயரை பெற்றவர். ஆனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி கடனில் சிக்கி, தவறான வழியில் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.