வெங்காய விதை சேமிப்பிற்கான செயல்முறைகள்!
சின்ன வெங்காயம் விதை உற்பத்தி செய்வதற்கான சில வழிமுறைகள் குறித்து கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக விதை பிரித்தெடுப்பு, உலர்த்துதல், சுத்திகரிப்பு உள்ளிட்ட செயல்முறைகள் குறித்து இந்த இதழில் காண்போம். அறுவடை செய்யப்பட்ட பூங்கொத்துக்களில் இருந்து விதைகளை பிரித்தெடுத்து அதன் தரத்தினை மேம்படுத்துதல் மிக அவசியம். விதை பிரித்தெடுக்கும்போது விதை காயப்படாமல் பிரித்தெடுக்க வேண்டும். பின்பு சரியான முறையில் உலரவைத்து பாதுகாக்க வேண்டும். நன்கு உலர வைத்த துணிப்பைகளில் போட்டு கைகளால் கசக்கியும் அல்லது வளையும் தன்மைகொண்ட மிருதுவான குச்சிகள் கொண்டு தட்டியும் விதைகளை பிரித்தெடுக்கலாம். அவ்வாறு பிரித்தெடுத்த விதைகளுடன் கூடிய தூசிகளை காற்றில் தூற்றி பிரித்தெடுத்துவிட வேண்டும்.
விதை உலர்த்துதல்
பிரித்தெடுத்த விதைகளை உடனே முறைப்படி உலரவைக்க வேண்டும். பிரித்தெடுத்த விதைகளை சேகரித்து கித்தான் சாக்குகளின் மேல் லேசாக பரப்பி நிழலில் 8 முதல் 10 மணி நேரம் வரை உலரவைக்க வேண்டும். பின் சூரிய ஒளியில் உலர வைக்க வேண்டும். விதைகளை வெயிலில் உலர்த்தும்போது தினமும் காலை 8 முதல் 12 மணி வரையிலும், பின்னர் 3 முதல் 5 மணி வரையிலும் உலர்த்துவது நல்லது. 12 முதல் 3 மணி வரை உள்ள காலத்தை தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அந்த இடைக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாக இருப்பதாலும் வெயிலின் வெப்பநிலை உச்சத்தில் உள்ளதாலும் விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
விதை சுத்திகரிப்பு
விதை சுத்திகரிப்பின்போது முற்றாத, உடைந்த, கெட்டுப்போன விதைகளையும், விதையுடன் கலந்திருக்கும் மற்ற விதைகள், கல், மண், தூசி முதலியவற்றையும் அகற்றிவிட வேண்டும். பின்பு, விதைகளின் உருவம், பரிமாணம், கன அடர்த்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விதைகளின் தரத்தை உயர்த்தலாம். வெங்காய விதைத்தரத்தை உயர்த்த பிஎஸ்எஸ் 10 நம்பர் கம்பி வலை சல்லடைகளை உபயோகிக்க வேண்டும். விதைகளை சலித்து மேலே தங்கும் தரமான, அடர்த்தியான விதைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.
விதை சேமிப்பு
விதை உற்பத்தி செய்வதில் எவ்வளவு கவனம் தேவையோ அதே அளவு கவனம் விதைகளை அடுத்த விதைப்புப் பருவம் வரை சேமித்து வைப்பதிலும் தேவைப்படுகிறது.
விதையின் ஈரப்பதம்
விதையின் ஈரப்பதத்தைப் பொறுத்து விதையின் தரம் மாறுபடுகிறது. விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகள் முளைப்புத்திறனை விரைவில் இழக்கின்றன. குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 7 - 8 சத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளில் நிறைத்து சேமியுங்கள். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 6 சத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலித்தீன் பைகளில் சேமித்து வையுங்கள்.
விதை நேர்த்தி
விதைகளை சேமிப்பதற்கு முன்பு பூஞ்சாணக்கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு திராம் அல்லது கேப்டான் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற விகிதத்தில் கலந்து வையுங்கள். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். குளோரினேற்றம் என்றால் கால்சியம் ஆக்ஸி குளோரைடு (அதாவது பிளீச்சிங் பவுடர்) என்ற ரசாயனப் பொருளை கால்சியம் கார்பனேட் என்ற பொருளுடன் சம விகிதத்தில் கலந்து காற்றுப் புகாத பாட்டிலில் ஒரு வாரம் அடைத்து வைத்திருந்து பின்னர் அந்தக் கலவையிலிருந்து ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் என்ற அளவில் எடுத்து கலந்து பின்பு சேமியுங்கள். குளோரினேற்றம் ஒரு சுற்றுப்புற சூழல் மாசுபடாத விதை நேர்த்தி முறையாகும்.
விதை சேமிப்புப் பைகள்
விதைகள் காற்றிலுள்ள ஈரத்தை கிரகிக்கும் தன்மை உடையவை. ஆகையால் காற்றின் ஈரத்தன்மை அதிகமுள்ள கடலோரப் பகுதிகள் ஆற்றோரங்களில் விதைகளை சேமித்திட ஈரக்காற்று புகாத பைகளை உபயோகிக்க வேண்டும். எப்போதும் புதிய பைகளையே உபயோகப்படுத்துங்கள்.
இடைக்கால விதை நேர்த்தி
சேமித்து வைத்திருக்கும் குறைந்த அளவு விதைகளை 5 அல்லது 6 மாத கால சேமிப்புக்குப் பின் `ஊறவைத்து உலர வைக்கும் முறை’ மூலம் விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு டை - சோடியம் பாஸ்பேட் என்ற ரசாயன மருந்தை 100 லிட்டர் நீருக்கு 3.6 கிராம் என்ற விகிதத்தில் கரைத்துவைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலில் (ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல்) விதைகளை 3 மணி நேரம் ஊற வைத்து பின்பு பழைய ஈரப்பதத்திற்கு காய வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதால் விதைகளின் சேமிப்புத்திறன் அதிகமாகிறது.